பரதன் பதில்கள்

முருகன் தன் கையில் சேவல் கொடி வைத்திருப்பது ஏன்? -வே. தணிகைவேலன், பெரம்பலூர்

முருகன் சூரபத்மனை சம்ஹாரம் செய்தபோது அழியாத வரம் பெற்றிருந்த சூரபத்மன் சேவலும், மயிலுமாக இரண்டு உருவங்கள் எடுத்தான். மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் ஆக்கிக் கொண்டார் முருகர்.

கிறிஸ்தவ மதம் மற்ற மதங்களை வெறுக்கிறதா? – கே. கிருஷ்ணசாமி, அவினாசி

ஏசு மட்டுமே கடவுள்… மற்ற சாமியெல்லாம் ‘சும்மா’ என்று நினைப்பதுவும், பேசுவதும் வெறுப்பின் வெளிப்பாடுகளே.

நெற்றியில் விபூதி பூசம்போது ஏதாவது மந்திரம் மனதில் சொல்ல வேண்டுமா? – தி.சாருலதா, மீஞ்சூர்

சொன்னால் நல்லது. ‘ஓம் நமசிவாய’ சொல்லலாம் அல்லது நமது இஷ்ட தெய்வத்தின் பெயரை உச்சரிக்கலாம்.

தன்னம்பிக்கை – அகம்பாவம்… என்ன வேறுபாடு? – ப. கன்னியப்பன், இளையாங்குடி

என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை. வேறு எவனாலும் முடியாது என்பது அகம்பாவம்.

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பற்றி ?  ந. சங்கரி, பண்ருட்டி

நீட் தேர்வு ரத்தானால் தனியார் கல்லூரிகள் லட்சக்கணக்கில் நன்கொடை பெயரில் கொள்ளையடிக்கலாம். இவர்கள் ஆட்சிக்கு வரப் போவதும் இல்லை… எதுவும் நடக்கப் போவதும் இல்லை.

வேலூர்  தேர்தல் ரத்து பற்றி ? – க. சீனிவாசன், சென்னை

தேர்தல் ரத்து மட்டும் போதாது. கோடிகளை அள்ளிவிட்டு வாக்காளர்களை விலைக்கு வாங்க திட்டமிட்ட வேட்பாளரை தகுதி நீக்கம் செய்வது தான் சரியானது.

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வர வாய்ப்பு உள்ளதா? – ஜெயா சங்கர், தேனி

நல்லதே நினைப்போம்…. நல்லதே நடக்கட்டும்.