பரதன் பதில்கள்

என்னதான் வருமானம் வந்தாலும் சேமிக்க முடியாத நிலை தொடருகிறதே?  தீர்வுதான்  என்ன?

– கே. சசிதரன், சென்னை

இது பற்றி ஒரு பெரியவரிடம் கேட்டபோது பரிகாரமாக ஒரு பசுவுக்கு வெள்ளிக்கிழமை தோறும் ஒரு கட்டு அகத்திக்கீரை கொடுத்து வணங்கி வர வேண்டும் என்று தெரிவித்தார். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

 

உண்மைகளைக் கூட யோசித்து சாயம் பூசிப் பேசு” என்கிறார் என் தாத்தா. இதற்கு என்ன பொருள்?

– மு. நிவேதா, தர்மபுரி

உங்கள் தாத்தாவிடமே விளக்கம் கேட்க வேண்டியது தானே… சத்யம் ப்ரூயாத், ப்ரியம் ப்ரூயாத்” என்பார்கள். நீங்கள் மாடு போல இருக்கிறீர்கள் என்று சொல்லாமல் பசுபோல இருக்கிறீர்கள்” என்று சொல்லுங்கள். இரண்டும் ஒன்றுதான்.

 

டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு விற்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது பற்றி?

– ம. சதிஷ், மேட்டுப்பாளையம்

நல்லவேளை இது ஒரு ஹிந்து பண்டிகை. இதுவே ஒரு முஸ்லிம் பண்டிகையாகவோ, கிறிஸ்தவ பண்டிகையாகவோ இருந்திருந்தால் மோடியின் மதவெறி என்று கூப்பாடு போட்டிருப்பார்கள். அதுசரி தீபாவளிக்கு மட்டும் ஏன் தடை?

 

பரதனாரே…  சிந்தனைக்கு  ஒரு  நல்ல  வாசகம்  சொல்லுங்களேன்?

– ப. மித்ரா, நாகப்பட்டிணம்

ஒரு கதவு மூடப்படும்போது, மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால் நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவற விடுகிறோம்.

 

கேரளா கோயில்களில் ‘தலித்’ அர்ச்சகர்களாக நியமித்துள்ளது பற்றி?

– சி. சந்திரலிங்கம், சைதாப்பேட்டை

தகுதி உள்ளவர்கள், பயிற்சி பெற்றவர்கள் யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம். ஆனால் கோயிலே கூடாது… சாமி என்பது ஏமாற்று என்று ஹிந்துத்வத்தை மட்டும் வசைபாடுகிறவர்களுக்கு கோயில் விஷயங்களில் தலையிட எந்த அருகதையும் கிடையாது.

 

கமல், ரஜினி அரசியல் பிரவேசம் பற்றி?

– ஏ.எஸ். ஹரி, கோவை

எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது. பிறவியிலேயே ஏழைகளுக்கு உதவும் நல்ல குணம் எம்.ஜி.ஆரிடம் இருந்ததால் அவரால் ஏழை, எளிய மக்களின் மனதில் குடியேற முடிந்தது.

 

‘டெங்கு’ வராமல் தடுக்க என்ன வழி?

– சி. அருண், திருச்சி

நிலவேம்பு கஷாயம் தான் சிறந்தது. ஆனால் வெறும் நிலவேம்பு பவுடர் கூடாது. சுக்கு, மிளகு, என 9 மூலிகைகள் கலந்துள்ள ‘நிலவேம்பு குடிநீர் சூரணம்’ என்று கேட்டு வாங்கி காலை, மாலை மூன்று நாட்கள் குடித்தால் நல்லது. பப்பாளி இலையின் சாறும் சிறந்தது.