உலகில் மிகவும் ஆச்சரியம் தருவது எது?
– அ. இளங்குமார் சம்பத், திருச்சி
இதே கேள்வியை மகாபாரதத்தில் யக்ஷன் தர்மரிடம் கேட்டபோது அவர் அளித்த பதில்: தினந்தோறும் ஏராளமான மக்கள் மடிந்து கொண்டேயிருக்கிறார்கள். இதைப் பார்த்த பிறகும்கூட தான் மட்டும் சாசுவதமாக இருக்கப் போவதாக நினைக்கிறானே மனிதன்!” – இதுதான் உலகில் ஆச்சரியமானது என்கிறார்.
வாழ்க்கை வெற்றிபெற தேவையானது எது?
– கே. தண்டபாணி, திருப்பூர்
‘மனம் நிறைய அமைதி’ – மீத விஷயங்களை இறைவனிடம் விட்டு விடுங்கள். ‘எது நடந்தாலும் நன்மைக்கே’ என்று எடுத்துக் கொள்ளுங்கள்.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் அரிய செய்தி என்ன?
– செல்வ. லக்ஷ்மி, தூத்துக்குடி
ஸ்ரீ ராமகிருஷ்ணர் நூல் எதுவும் எழுதவில்லை. மேடைப் பிரசங்கங்கள் செய்யவில்லை. அவரது எளிய வாழ்க்கையே அவரது செய்தி ஆயிற்று.
* ‘ஹிந்துத்துவம்’ என்றாலே ‘பிராமணீயம்’ என்கிறார்களே?
– கோதை முருகன், அருப்புக்கோட்டை
இதெல்லாம் திக-வினரின் தொடர்ந்த பொய்ப் பிரச்சாரம். நாயன்மார்கள், ஆழ்வார்களிலே எல்லா ஜாதியினரும் உண்டே? காயத்ரி மந்திரத்தை அருளிய விசுவாமித்திரர், ராமாயணத்தை வழங்கிய வால்மீகி, மகாபாரதத்தை எழுதிய வியாசர் போன்ற ரிஷிகள் அந்தணர்கள் இல்லையே.
வருகின்ற சட்டமன்றத் தேர்தல் பாஜக கூட்டணியில் விஜயகாந்த் தொடருவாரா?
– என்.ஸ்ரீதரன், சென்னை
இதற்கான பதில் அவருக்கே தெரியாது. தெளிவாக முடிவெடுக்கிற குணம் அவரிடம் இல்லை. பாஜக கூட்டணியில் தொடர்ந்து நீடித்து, தமிழகத்தில் திமுக-அதிமுகவிற்கு மாற்று என்று முடிவெடுத்தால் இன்றில்லை என்றாலும் எதிர்காலம் அவருக்கு உண்டு. ஒருவேளை திமுகவுடன் சேர முடிவெடுத்தால் அதுவே அவருக்கான அழிவுக்கான ஆரம்பம்.
* திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தன்று அன்னதானம் செய்ய விரும்புவோர் நகராட்சியிடம் அனுமதி வாங்க வேண்டும் என்ற உத்தரவு பற்றி?
– இரா. குணசேகரன், திருவண்ணாமலை
இது ஹிந்துக்களை இழிவுபடுத்துவதாகும். ரம்ஜான் நோன்புக்காக தமிழக அரசே 4,500 மெட்ரிக் டன் அரிசியை இலவசமாக வழங்குகிறது. 20 லட்சம் பக்தர்கள் திரளும் தீப விழாவிற்கு அரசு எந்த உதவியும் செய்யாது போனாலும் உபத்திரவமாவது செய்யாமல் இருக்கட்டுமே.
ருத்ரமாதேவி – படம் எப்படி?
– கோ. தியாகராஜன், கீழ்வேளூர்
பிரம்மாண்டமான தயாரிப்பு – பெண்மையைப் போற்றும் கதை – அனுஷ்காவின் நடிப்பு, இளையராஜாவின் இசை சூப்பர். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.