நாட்டுக்கு நல்லதல்ல!

சுதந்திரம் பெற்ற பின் பல ஆண்டுகள் மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி, இப்போது மத்தியிலும் ஆட்சியை இழந்து, தொடர்ந்து மாநிலங்களையும் பறிகொடுத்து வருகிறது. இப்போது நான்கு மாநிலங்களில் தான் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வருகிறது. அதில் குறிப்பிடத்தக்க பெரிய மாநிலம் என்றால் கர்நாடகா மட்டுமே. சீத்தாராமையா தலைமையில் அங்கு ஆட்சி நடைபெற்று வருகிறது. எதிர் வரும் கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் ராகுல் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு வர இருக்கிறது. அதனால் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் தகிடுதித்தங்கள் செய்து வருகிறது.

கர்நாடகாவில் உள்ள 210 சட்ட பேரவைத் தொகுதிகளில் 110 இடங்களில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக் கூடியவர்களாக லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மக்கள் தொகையில் 17 சதவீதம் இருக்கிறார்கள். பாஜகவின் எடியூரப்பா லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அதனால் இயற்கையாகவே அவர்களின் ஆதரவு அவருக்குத்தான் கிடைக்கும். இதனை முறியடித்திட காங்கிரஸ் செய்த ஒரு பெரிய தில்லுமுல்லு திட்டம்தான் லிங்காயத் சமுதாயத்தை தனி மதமாக அங்கீகரித்தது. அவர்களுக்கு மைனாரிட்டி அந்தஸ்தையும் அறிவித்துள்ளது.

லிங்காயத் பிரிவை 12ம் நூற்றாண்டில் துவக்கியவர் பசவப்பா. அவர் சிறந்த சிவ பக்தர். இந்த சமூகத்தினர் கழுத்தில் சிவலிங்கம் அணிந்து சிவனை வழிபடுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக ஹிந்துக்களில் ஒரு பிரிவினருக்கு தலித் என்று பெயர் சூட்டி, அவர்களை ஹிந்து சமுதாயத்திலிருந்து பிரிப்பதற்காக நடந்த சூழ்ச்சிகள் போன்று இதுவும் ஹிந்து சமுதாயத்தை பிளவுபடுத்துவதற்கான முயற்சிகள் தான்.

இத்தகைய போக்குகள் ஹிந்து சமுதாயத்தை பலவீனப்படுத்திவிடும். இது நாட்டுக்கு நல்லதல்ல.