நல்ல காலம் இருக்குது!

இதோ ‘தலைவர்கள்’

* பல கோடி ரூபாய் வருமானம் வரும் குளிர்பான விளம்பரம் ஒன்றை விராட் கோலி வேண்டாம் என கூறி உள்ளார். இந்த குளிர்பானத்தை அவர் அருந்துவது இல்லை என்பதால் அதை மறுத்து உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. தான் எதை மற்றவர்களுக்குக் கூறுகிறோமோ அதை நாம் முதலில் கடைபிடிக்க வேண்டும் என்ற கொள்கையில் விராட் கோலி உறுதியாக இருப்பது பலரது பாராட்டுதலையும் பெற்றுத் தந்துள்ளது.

* சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாக தேசிய பாட்மின்டன் பயிற்சியாளர் பி.கோபிசந்த் இதே போன்ற ஒரு கொள்கையின் அடிப்படையில் மிகப்பெரிய தொகைக்கான விளம்பர ஒப்பந்தத்தைத் துறந்தார். தான் குளிர்பானம் எதையும் அருந்துவதில்லை என்பதால் அடுத்தவர் பயன்படுத்த பெரிய தொகையைப் பெற்றுக் கொண்டு விளம்பரம் செய்வது நியாயமல்ல என்று கோபிசந்த் கருதி, ஒப்பந்தத்தை மறுத்தது குறிப்பிடத்தக்கது.

நம் ஊர் நடிகர்களும் இது குறித்து யோசிக்கலாமே!

 

இதோ ‘தொண்டர்கள்’

ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 185 இளைஞர்கள் பயிற்சி முடித்து ராணுவத்தில் இணைந்தனர்.  மாநிலத்தில் நடந்த ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களின் பயிற்சி நிறைவையொட்டி நடந்த அணிவகுப்பை வீரர்களின் பெற்றோர் உறவினர், பார்வையாளர் வரிசையில் அமர்ந்து பார்வையிட்டனர்.  இளம் வீரர்கள் ராணுவ உடையுடன் மூவர்ண கொடிக்கு வணக்கம் செலுத்தினர்.

ராணுவத்தில் சேர்ந்துள்ள, ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 185 பேரும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தங்கள் பிள்ளைகள் பாரத ராணுவத்தில் சேர்ந்து, நாட்டிற்கு சேவையாற்ற உள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக அவர்களின் பெற்றோர் தெரிவித்தார்கள்.