நடந்து காட்டினார்கள்

நமது தேசிய ஒருமைப்பாட்டில் ஓர் ஆச்சர்யமான நிகழ்வு – அவதார புருஷர்களான ஸ்ரீ ராமரும் ஸ்ரீ கிருஷ்ணனும் விந்தியமலைக்கு அப்பால் வடக்கே பிறக்கிறார்கள். நமது ஆசார்ய புருஷர்கள் அனைவரும் விந்தியமலைக்கு இப்பால் தெற்கே பிறக்கிறார்கள்.

நமது ஆசார்ய புருஷர்களில் சங்கரரும் ராமானுஜரும் தாய்மொழியாகத் தமிழைக் கொண்டிருந்தவர்கள். அவரவர்கள் வாழ்ந்த காலச் சூழ்நிலைக்கேற்பவும் சமுதாயத் தேவைகளுக்கு ஏற்பவும் அவர்களது பணிகள் அமைந்தன. குறைந்த காலமே வாழ்ந்தாலும் தேசம் முழுவதையும் பலமுறை சுற்றி வந்தவர் சங்கரர். அவரது காலத்தில் மக்களிடையே சிந்தனைக் குழப்பத்தை உண்டுபண்ணிய 72 துர்மதங்கள் இருந்தன என்று தெரிகிறது. அப்போதைய பாரதத்தின் நிலை எப்படி இருந்தது என்றால் பூரணமான ஸனாதன தர்மம் மிகவும் நலிவடைந்திருந்தது. வைதிகம் என்ற போர்வையில் தாந்த்ரீக மதங்களும் வேதம், பகவான் ஆகிய இரண்டையும் தள்ளிவிட்ட அவைதிகமதங்களும் நாட்டில் மலிந்திருந்தன.

ஆக்கரீதியில் மக்களை அழைத்துச் செல்ல ஆன்மிகத்தலைவர் ஒருவர் தேவைப்பட்டார். அத்தேவையை பூர்த்தி செய்ய வந்தவர் சங்கரர். வைதிக மதங்களுக்கிடையே சமரசம் காணவேண்டிய அவசியமும் அன்று இருந்தது. இன்று நமது சமுதாயம் மிகவும் சிலாகிக்கும் பரந்த மனோபாவத்திற்கும் சமய சகிப்புத்தன்மைக்கும் வித்திட்டவர் சங்கரர்.

ராமானுஜர் பிறந்தபோது சங்கரர் பரப்பிய அத்வைதம் தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டு அதனைப் பின்பற்றியவர்கள் வெறும் சடங்குகளில் சிக்கி வறட்டு வேதாந்திகளாக மாறிவிட்டிருந்தனர். சமுதாயத்தில் சமயம் என்பது ஏதோ மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே என்பதுபோல மேல்தட்டு மக்களுக்கும் கீழ்தட்டு மக்களுக்குமான இடைவெளி மிகவும் அகன்று போயிருந்தது. ஆழ்வார்கள் பரப்பிய பக்தி நெறியும் அவர்களது பாசுரங்களும் கால இடைவெளியில் உரிய பிரச்சாரம் இன்றி ஓரங்கட்டப்பட்டிருந்தன. தன் காலத்தின் தேவையை பூர்த்தி செய்தார் ராமானுஜர். வேத நூல் பிராயம் நூறையும் தாண்டி வாழ்ந்து ஆன்மீக நிலையில் நலிவடைந்து கிடந்த சமுதாயத்தினரை  நெறிப்படுத்தினார்.

இருவரின் ஜன்ம திதியும் பஞ்சமியாக அமைந்ததால் பல ஆண்டுகளில் அவர்களது ஜயந்தி விழாவும் ஒன்றாகவே அமைந்துவிடும். இருவரது வாழ்விலும் ஒரு குறிப்பிட்ட சம்பவம் அவர்களுக்கு ஞானோதயத்தைத் தந்தது. காசி நகரத்தின் குறுகலான சந்துகளில் ஒன்றில் சங்கரர் நடந்து வந்துகொண்டிருந்தபோது எதிர்திசையிலிருந்து புலையன் ஒருவன் தோளில் கள்ளுக்கலயத்துடனும் கைகளில் நான்கு நாய்களைக் கயிற்றினால் கட்டிப் பிடித்தவாறும் வந்து கொண்டிருந்தான். சங்கரருக்கு மிக நெருக்கமாக வந்துவிட்ட அவனிடம் சங்கரர், சற்றே விலகிச் ெசல்” என்றார். எதிரில் வந்த புலையன், “துறவியே! எதை எதிலிருந்து விலகிப் போகச் சொல்கிறீர்கள்? உங்கள் உடலை விட்டு என்னுடைய உடல் விலக வேண்டுமா? இரண்டு சரீரங்களுமே வெறும் எலும்பும் மாமிசமும் ரத்தம், நரம்பு, மல மூத்திரங்களோடு கூடியவை. எதற்காக ஒன்று மற்றொன்றிலிருந்து விலகிச் செல்ல வேண்டும்?

ஆன்மாவை விலகிப் போகச் சொன்னீர்களா? எனக்குள்ளும் உங்களுக்குள்ளும் இருக்கும் சைதன்யம் இரண்டல்லவே. எதிலிருந்து எது விலகுவது? எங்கிருந்து எங்கே விலகுவது?”

அவனது இந்தக் கேள்வி ‘சுரீர்’ என்று உறைத்தது சங்கரருக்கு.

எனது சித்தத்தில் தெளிவு ஏற்படுத்திய தங்களுக்கு நமஸ்காரம்” என்று ஐந்து சுலோகங்கள் சொல்லி அவனுக்கு நமஸ்காரம் செய்தார். அந்த சுலோகங்களுக்கு ‘மனீஷா பஞ்சாங்கம்’ என்று பெயர்.

திருவாலி திருநகரி க்ஷேத்திரத்தில் ராமனுஜர் தனது சிஷ்யர்களுடன் ஒரு தெரு வழியே வந்து கொண்டிருந்தார். எதிரே தாழ்ந்த குலம் என்று கருதப்பட்ட ஜாதியைச் சார்ந்த ஒரு முதிய பெண்மணி வந்து கொண்டிருந்தாள்.

“அம்மணீ! சற்று விலகி நில்லுங்கள். நாங்கள் போய்விடுவோம்” என்றார் ராமானுஜர். அந்த அம்மையார் “எந்தப் பக்கம் ஒதுங்கோணுங்க! வலப்பக்கம் ஒதுங்கினா பரகாலன் பெருமாளை வழிப்பறி ெசய்த திருமன்னன் கொல்லை. இடது பக்கம் ஒதுங்கினா திருவாலன் பெருமாள் கோயில். பின்பக்கம் போனா திருக்கண்ணபுரம் திருக்கோயில்.  முன்பக்கம் வந்தா நீர் இருக்கிறீர். எந்தப்பக்கம் ஒதுங்கட்டும் சொல்லுங்க?” அதிர்ந்து போய் திகைத்து நின்றார் ராமானுஜர்.

“ஆணவம் அறிவுக் கண்ணை மூடிவிட்டது. சரியானபடி கண்களைத் திறந்தாய் தாயே! நீயல்லவோ உண்மையான வைஷ்ணவப் பெண்”  என்றுரைத்தார் ராமானுஜர். அந்த ஊர் ஆலயத்தில் பெருமாள் பக்கத்தில் அவள் திருவுருவம் இன்றும் காட்சி தருகிறது.

சங்கரர் என்ற மாமனிதர் பிறக்கவில்லை என்றால் இன்று நாம் ஆன்மிக ரீதியான தேசிய ஒருமைப்பாடு நிச்சயமாக நிலைத்திருக்காது.

ராமானுஜர் தோன்றவில்லை என்றால் அடித்தட்டு மக்கள் பல லட்சம் பேருக்கு ‘திருக்குலத்தார்’ என்ற அழகு தமிழ்ப் பெயரும் ஆன்மிக அந்தஸ்தும் கிடைத்திருக்காது.

இருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள். தமது காலத்திற்கேற்ற பணியைச் செய்தார்கள். இருவருமே நமது ஹிந்து சமுதாயத்தை உய்விக்க வந்த மஹான்கள். அவர்களைப் பூஜித்துப் புகழ்ந்து பாடுவதோடு நிற்காமல், அவர்கள் காட்டிய சமுதாய நல்லிணக்கப் பாதையில் பயணித்துப் பயன் பெறுவோமாக!