ஏனோ தெரியவில்லை நம் பிரதமர் நரேந்திர மோடி எதைச் சொன்னாலும் அதற்கு மதவாத சாயம் பூசி தர்க்கம் செய்வதென்பது இங்குள்ள மதசார்பற்ற கட்சிகள் என்று தங்களை பறைசாற்றிக் கொள்பவர்களுக்கு சம்பிரதாயமாகவே போய்விட்டது.
இந்நிலையில் மோடி, நாட்டு மக்கள் எல்லோரும் தினமும் காலையில் ‘வாக்கிங்’ போவது உடல் நலத்துக்கு நல்லது” என்று சொல்லி வைக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே அதை, ‘விட்டேனா பார்!’ டிவி நிகழ்ச்சியில் பிரதான பிரச்சினையாக எடுத்துக்கொண்டு, மூன்று நான்கு விதண்டாவாதிகளோடு, ஒரு சாதுவான வாதியை வரவழைத்து உட்காரவைத்து அலசும் அவலம்தான் இந்த கற்பனை.
நடுநிலையாளர்: அட்டகாசம் டிவி நேயர்களே இன்றைக்கு நம் பிரதமர் மோடி ஜனங்கள் எக்கேடு கெட்டாவது போகட்டும் என்று விடாமல் அவர்களுக்கு நல்லது சொல்ல வேண்டுமென்ற ஆவலில் தினமும் வாக்கிங் போகவேண்டும்” என்று அறிவுரை செய்திருப்பது எங்களை சிந்திக்க வைக்கவில்லை என்றாலும் எதிர்க் கட்சிகளை தூக்கமில்லாமல் செய்துவிட்டதென்று நம்புகிறோம். ஏதோ பொதுவான நல்ல அறிவுரை என்று நாங்கள் விட்டுவிட்டாலும் ‘விட்டேனா பார்’ நிகழ்ச்சியில் இதை விவாதிக்காவிட்டால் உங்கள் டிவியை விட்டேனா பார் என்று அவர்கள் பயமுறுத்தியதில் இந்த நிகழ்ச்சிக்கு அவர்களையும், ஒப்புக்காக ஒரே ஒருவரை மோடி பக்கம் பேசவும் அழைத்துள்ளோம். இனி தொடரலாம்.
முதலில் ‘எதற்கெடுத்தாலும் எதிர்ப்போம்’ கட்சி ஏடாகூடத்தான் அவர்களிடம் கேட்கிறோம். மிஸ்டர் ஏடாகூடத்தான் சார்! ‘வாக்கிங் போவது நல்லது’ன்னு சொல்றதுலே என்ன கெட்டதுன்னு நீங்க நினைக்கறீங்க.
திரு ஏடாகூடத்தான்: மோடி அவர்கள் பேசுவதை நாங்கள் எப்போதும் யதார்த்தமாக நம்புவதில்லை. அப்படி நம்ப வேண்டாமென்று நாட்டு மக்களுக்கு நல்குவதே எங்கள் கட்சியின் நலதிட்டத்தில் ஒன்றாக கருதி செயல்படுகிறோம்.
‘எல்லோரும் வாக்கிங் போக வேண்டுமென்று ஒரு நாட்டின் பிரதமர் கூறியிருப்பது நாட்டில் பலபேர் சோம்பேறிகளாக தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை பிரதமர் இடிந்துரைப்பதாகத் தான் தெரிகிறது. இதை பொதுமக்கள், அதிலும் தமிழ்நாட்டு மக்கள் பொறுத்துக் கொள்வார்கள் என நான் நம்பவில்லை. ‘இப்படி உதவாக்கரையா தூங்கிட்டு இருக்கயே நீ உருப்படுவாயா’ என்ற ரீதியில் பிரதமர் நாட்டு மக்களை சாடியிருக்கிறார். இதற்கு அடுத்த தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என நம்புகிறோம்.
நடுநிலையாளர்: பிரதமர் நல்லதுக்குதானே சொல்லியிருக்கார்னு நானும் நினைச்சுட்டிருந்தேன். இதிலே இத்தனை விவகாரம் இருக்குன்னு எனக்கே லேசா புரிய ஆரம்பிக்குது.
சாது சங்கரன்: மரியாதைக்குரிய பிரதமர் உண்மையான ஆதங்கத்துடன் நாட்டு மக்களுக்கு இந்த அறிவுரையை தந்துள்ளார் ஏடாகூடமாக ஒருவர் இதை திரித்து பேசுவதைக் கேட்டு நடுநிலையாளரான நீங்களே இப்படி பேசுவது நியாயமா சொல்லுங்கள்.
நடுநிலையாளர்: நீங்கள் ஒருவர் மட்டுமே நியாயம் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியுமா? மற்றவர்களையும் கேட்க வேண்டுமே! இப்போ பத்திரிகை ஆசிரியர் குதர்க்கம் குப்புசாமி அவர்கள் தன் குதர்க்கத்தை மன்னிக்கவும் தன் தர்க்கத்தை தொடரலாம்.
குதர்க்கம் குப்புசாமி: திரு ஏடாகூடத்தான் அவர்களுக்கு இப்படியொரு அபார சிந்தனை என நானே வியக்கிறேன். மோடி எதை சொன்னாலும் அதில் குதர்க்கம் காண்பதே எங்கள் கழகத்திற்கும் பழக்கம் என்றாலும் எங்கள் கொள்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கொள்கையுடைய ‘எதெற்கெதுத்தாலும் எதிர்ப்போம்’ கழகத்தினரான இவருக்கு இப்படிப்பட்ட ஒத்துபோகும் கருத்து அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி.
நாட்டு மக்களை மோடி சோம்பேறிகள் என்று சுட்டிக் காட்டுவதோடு அவர்கள் வெறுமனே காலில் நடப்பதற்குத்தான் லாயக்கானவர்கள் என்றும் கேவலப்படுத்தியுள்ளார்.
ஏழை எளிய மக்கள் பேருந்துகளிலோ, ரயில் வண்டிகளிலோ கூட போக லாயக்கில்லாத பிரதேசிகள் என்று அவர் மறைமுகமாக கூறியிருப்பதை நாங்கள் எப்படியோ தெரிந்து கொண்டு விட்டோம். மக்களில் பலபேர் இப்படி பரதேசியாக காலமெல்லாம் கால் வலிக்க நடந்தே ஆக வேண்டும் என்பது பிரதமரின் நோக்கம் என்பதை எல்லோரும் நோக்க வேண்டும். நாட்டு மக்களை நடக்க வேண்டும் என்று கேவலப்படுத்தும் பிரதமர் தான் போகும் அயல்நாடுகளுக்கு எல்லாம் இனி நடந்தே போவாரா என்று கேட்கிறோம். அப்படியானால் பாகிஸ்தான் பார்டர் வரை போய்க் காட்டட்டும். அதன் பின் ஜனங்களுக்கு அறிவுரை கூறட்டும்.
இதற்கு முன் எங்கள் தலைவர் எப்போதும் மௌனமாக இருந்தார். அதனால் எது நடந்தாலும் நாட்டு மக்களை மௌனமாக இருக்க வேண்டுமென்று அறிவுரை சொன்னார். இப்படி எங்கள் தலைவர் செய்ததையே சொன்னார். மோடியும் இனி ஆகாய விமானத்தை தவிர்த்து ஆகாயமார்க்கமாக வாக்கிங் போய் காட்டிவிட்டு பின் மக்களிடம் வாக்கிங் போகச் சொல்லட்டும்.
நடுநிலையாளர்: ஆனா பெரும்பான்மையான நாட்டு மக்களுக்கு நாட்டு மருந்து டாக்டரோ அலோபதியோ ஹோமியோபதி டாக்டரோ யாராக இருந்தாலும் வாக்கிங் போவது நல்லது என்றுதானே அட்வைஸ் செய்கிறார்கள். அப்படிப்பார்த்தால் பெரும்பான்மையானவர்கள் தினமும் வாக்கிங் போய்க் கொண்டுதானே இருக்கிறார்கள். இதுபற்றி சிக்கல் தீர்ப்போனிடம் கேட்போம். எஸ் சொல்லுங்க மிஸ்டர் சிக்கல்.
சிக்கல் தீர்ப்போன்: நன்றி! இந்த நன்றி என்னை பேச சொன்னதற்கல்ல. நடுநிலையாளரான நீங்களே என் வாதத்திற்கு எண்ணெய் தடவி உருவி விட்டதுபோல் மோடி சொன்னதை பெரும்பான்மையோர் ஏற்கனவே பின்பற்றுவதாக கூறிவிட்டீர்கள். சிறுபான்மை சமூக நலன்களுக்காக போராடும் எங்கள் கட்சி மோடியைப் பார்த்துக் கேட்கும் கேள்வி இதுதான். தாங்கள் எப்போதுமே பெரும்பான்மை சமூகத்துக்கு உண்டான திட்டங்களுக்குத்தான் முக்கியம் அளிக்கிறீர்கள். பெரும்பான்மையோர் நலத்திற்கு மட்டுமே உங்கள் அரசாங்கம் சேவை செய்கிறது. ஒடுக்கப்பட்ட சிறுபான்மயோருக்கு உங்கள் ஆட்சியில் எந்த நன்மையும் இல்லவே இல்லை. பெரும்பான்மையோர் நலத்திற்கு இப்படி ஒரு வாக்கிங் போவதை சொல்லும் உங்கள் அக்கறை சிறுபான்மையோரிடம் ஏன் இல்லாமல் போனது. ஆகவே சிறுபான்மையோரை இழிவு செய்து உதாசீனப்படுத்தும் வகையில் இப்படி அடிக்கடி எதையோ கூறிவந்தால் சிறுபான்மை மக்களின் அத்தனை ஓட்டுக்களும் சிந்தாமல் சிதறாமல் எங்கள் கட்சிக்கே வந்துசேரும் என்பதை உறுதியாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நடுநிலையாளர்: சிக்கல் சார்… உங்கள் பேச்சு கொஞ்சம் சிக்கலா புரியாம இருக்கு.. சரி முதல் சுற்றில் கடைசியாக எந்த மதமும் சாரா சந்திநாதன் அவர்களின் கருத்தைக் கேட்போம் சந்திநாதன் நீங்க ஆரம்பிக்கலாம்.
சந்திநாதன்: எந்த மதத்தையும் சாராமல் எந்த சமய பாதையிலும் செல்லாமல் சந்தியில் நின்று சிந்திக்கும் கட்சியைச் சார்ந்தவன் நான். நாங்கள் எதற்கும் மதசாயம் பூசி பேசமாட்டோம். ஆனால் மோடி பேசுவதெல்லாமுமே மதசாயம் பூசிக் கொண்டு வருவதாக எங்களின் நடுநிலை கண்ணுக்கு தெளிவாக தெரிவது மக்கள் செய்த புண்ணியம் என்பது எங்களின் புரட்சி சிந்தனை.
‘வாக்கிங் போ’ என்கிறார் பிரதமர். செக்யூலர் நாடு என்று கொண்டாடப்படும் நாட்டின் பிரதமர் ஹிந்து மதத்தின் கடவுள் நம்பிக்கையை மறைமுகமாக இதில் திணித்திருப்பது அவர் பிற மதங்களுக்கு செய்யும் நம்பிக்கை துரோகம்.
ஹிந்து மதத்தில் மட்டும் தான் நடராஜர் என்ற கடவுளை வணங்குகிறார்கள். அவர் எப்போதும் நடந்து கொண்டோ நடனமாடிக் கொண்டோ இருப்பதால் ஹிந்துக்களுக்கு ஆர் இஷ்ட தெய்வமாக திகழ்கிறார். அப்படிப்பட்ட ஹிந்துக் கடவுளை மற்ற மதத்தவர் மீதும் திணிக்கும் நோக்கமே அவர் பெயரில் இருக்கும் இந்த நடை பயிற்சியும்! கிறிஸ்தவர்கள் ஏசுராஜா என்று தான் கூறுவார்கள். இஸ்லாமிய மக்களுக்கு அல்லா தான் தெய்வம். ஹிந்துக் கடவுளான நடராஜரை கவனத்தில் கொண்டு நம் பிரதமர் இந்த நடைபயிற்சி செய்யச் சொல்கிறாரே, மற்ற கடவுள் பேரிலும் இப்படி ஏதாவது செய்யச் சொல்ல அவருடைய ஹிந்துத்துவா இடம் அளிக்குமா?
அதுமட்டுமா? நடப்பவை எல்லாம் நாராயணன் செயல் என்று ஹிந்து மத வைணவர்கள் மட்டுமே கூறுவார்கள். ஆகவே மோடி இந்த ‘வாக்கிங்’ யுக்தியை சைவ, வைணவ வாக்காளர்களை கவரவே கொண்டு வந்திருப்பது தெளிவாகிறது.
நடுநிலையாளர்: எனக்கே தலைசுற்றுவதால் முதல் சுற்றிலேயே இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். அதற்கு முன் ரெட்டியார் பட்டியிலிருந்து வாக்கிங் ஸ்பெஷலிஸ்ட்டான டாக்டர் சுமதி சுந்தரம் அவர்களை இங்கிருந்தே இது பற்றிய ஒப்பீனியனைக் கேட்போம். அவர் அரங்குக்கு வரவில்லை. ஹலோ… டாக்டர் சுமதிசுந்தரம் நாங்க பேசறது கேட்குதா. ஊம் சொல்லுங்க.
(சில நொடி தாமதத்துக்கு பின் சுமதிசுந்தரம் பேசுகிறார்)
ரெட்டியார்பட்டி சுமதி சுந்தரம்: நான் ஸ்வீடன்லே வாக்கிங் ஸ்பெஷலிஸ்ட்டாக ஒர்க் பண்ணிட்டிருந்தேன். அங்கே அத்தனை குளிரிலும் அந்த நாட்டு ஜனங்க வாக்கிங் போவதை தவறாம செய்வாங்க.. அதனாலே நான் உறுதியாய் சொல்றேன் ‘வாக்கிங்’ போவது மிகவும் நல்லது. ரொம்ப ரொம்ப நல்லது.
டாக்டர் பேசிக்கொண்டிருக்கும் போதே ‘சாமிநாதன்’ எதையோ புதிதாக கண்டுபிடித்தவர்போல உணர்ச்சிவசப்பட்டு கத்த ஆரம்பிக்கிறார்.
சந்திநாதன்: பார்த்தீங்களா. நான் சந்தேகப்பட்டது இப்போ அப்பட்டமா நிரூபிக்கப்பட்டுள்ளது. மோடி இப்படி பேசியதற்கு ஹிந்துத்துவா தான் அடிப்படை காரணம் என்று நான் அப்போதும் சொன்னேன். அது ஆர்.எஸ்.எஸ் சொல்படிதான் நடந்திருக்கிறது என்பது இப்போது டாக்டர் அவர்களே ஒப்புக் கொண்டுள்ளார். ரெட்டியார்பட்தி சுமதி சுந்தரம் என்ற டாக்டர் ஆர்.எஸ்.எஸ் சொன்னதைத்தான் பிரதமர் செயல்படுத்த துடிக்கிறார் என்பதை மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். இனி யாரும் நடப்பது என்பது நடக்காமல் போகும்.
(நடுநிலையாளர் நடுங்கியபடி மயங்கி விழ நிகழ்ச்சி முடிவடைகிறது)
இனி அடுத்த நாள் அதிகாலையில் சந்திநாதனை செல்லில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் கூப்பிடுகிறார்.
டிவி தொகுப்பாளர்: அண்ணே! நேத்து உங்களுக்கெல்லாம் நன்றி சொல்ல முடியாம மயங்கி விழுந்துட்டேன்.. வெரி சாரி!
சந்திநாதன்: எங்களைப் போல மதசார்பற்றவர்களின் சிந்தனையைத் தூண்டும் பேச்சு கொஞ்சம் மயக்கம் வரவழைப்பது இயல்புதானே தம்பி… ஆமா என்ன இப்படி காலையிலே கூப்பிடறீங்க.
டிவி தொகுப்பாளர்: அண்ணே! நீங்க இன்னிக்கும் ஒரு விவாதத்துக்கு வரணும்.
சந்திநாதன்: ஓகே! வந்துட்டா போச்சு! என்ன சப்ஜெக்ட்! வேற யார் யாரு வர்றாங்க?
டிவி தொகுப்பாளர்: எல்லாம் அதே டீம்தான் ஆனா தீம் தான் வேற.
சந்திநாதன்: ஓஹோ அதே டீம் தானா அப்ப இப்பவே நானே அவங்ககிட்டே சொல்லிடறேன். என் கூடத்தான் ஏடாகூடத்தான், குதர்க்கம் குப்புசாமி, சிக்கல் தீர்ப்போன் எல்லாம் இருக்காங்க.
டிவி தொகுப்பாளர்: என்ன அண்ணே நாலு பேரும் காலை நேரத்திலே ஒண்ணா இருக்கீங்க. ஏதாவது கூட்டணி பத்தி பேசறீங்களோ…
சந்திநாதன்: ஹி..ஹி… நாலுபேரும் ஒண்ணாதான் ரொம்ப நாளா மெரினாவாண்ட வாக்கிங் போயிட்டு இருக்கோம். என்ன இன்னியிலிருந்து முக்காடு போட்டுட்டு போக வேண்டியதா ஆயிடுச்சி. எல்லாம் இந்த பிரதமர் செஞ்ச வேலை!
அகிலா கார்த்திகேயன்