‘தமிழ்’ அமைப்பினர் முற்றுகையிட வேண்டிய இடம் சத்யமூர்த்தி பவன்; ‘சக்தி’ அல்ல!

மிழகத்தில் காவிரி பிரச்சினை கொழுந்து விட்டு எரிகின்ற இத்தருணத்தில், ‘தமிழ்’ இயக்கங்கள் ஆர்.எஸ்.எஸ். மீது குற்றம் சுமத்தி, ஆர்.எஸ்.எஸ். காரியாலயத்தின் முன் ஆர்பாட்டம் நடத்தியது அக்கிரமம். தமிழகத்தில் காவிரி பிரச்சினையில் சிக்கலை ஏற்படுத்தியவர்கள், தவறிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள அபாண்டமாக ஆர்.எஸ்.எஸ் மீது பழி போடும் செயலே இது.

கர்நாடகாவில் உள்ள தமிழர்களை காக்க வேண்டும் என்ற நோக்கத்தை விட, தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற விருப்பதை விட, தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்வதை தடுக்க வேண்டும், மத்தியில் மோடி ஆட்சியின் மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கம் தான் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதானமான நோக்கம். காரணம் ஆர்பாட்டத்தில் எழுப்பிய கோஷங்கள் அவர்களின் உண்மை சொரூபத்தை காட்டிக் கொடுத்தது.

ஆர்பாட்டத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன் காஷ்மீர் மாநில எல்லைக் கோடு பகுதியில் உள்ள யூரீ என்ற இடத்தில் முஸ்லிம் பயங்கரவாதிகளின் தாக்குதல்களால்  18 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.  தமிழகத்தில் வளர்ந்து வரும் முஸ்லிம் பயங்கரவாதிகளின் செயல்பாட்டிற்கு பங்கம் வந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே, ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் முன் ‘தமிழ்’ அமைப்புகள் குறிப்பாக பிரிவினையையும் பயங்கரவாததத்தையும் ஊக்குவிக்கும் அமைப்புகள் இந்த ஆர்பாட்டத்தை நடத்தின.

இவர்களின் பின்னணியில் முஸ்லிம் அமைப்புகள் உள்ளன என்பது ரகசியமல்ல.

1969ல் இருந்து காவிரிப் பிரச்சினை என்பது பெரிய பிரச்சினையாக ஆகிவிட்டது.  தமிழகத்தின் முதல் அமைச்சராக அண்ணாதுரை இருந்தபோது, தமிழகத்தில் பொதுப்பணித்துறை என்ற ஒரு துறையே கிடையாது.  பொது மராமத்து துறைதான் இருந்தது. அதற்கு அமைச்சராக இருந்தவர் கருணாநிதி. மொடக்குறிச்சி சட்ட மன்ற உறுப்பினரும் சோஷலிஸ்ட் கட்சியின் தலைவருமான நல்லசிவம், சட்டமன்றத்தில் ஒரு கேள்வி எழுப்பினார்: ‘அய்யா கருணாநிதி அவர்களே, நீங்கள் தஞ்சையில் பிறந்து இங்கு வந்து இருக்கிறீர்கள்.  அங்கே மேலே ஒன்பது அணைகள் கட்டிக்கொண்டு இருக்கிறது கர்நாடகம், அதை நீங்கள் எதிர்க்க வேண்டாமா?’ இந்த கேள்விக்கு நேரடியாக பதில் கூறவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், அதிகாரி எழுதிய கடிதத்தில், தமிழகத்தின் அனுமதியில்லாமல் கர்நாடகம் ஒன்பது அணைகள் கட்டுகிறது,  இது தவறு என கூறி மத்திய அரசுக்கு கடிதம் எழுத வேண்டும் என குறிப்பு எழுதியும் கூட, கருணாநிதி கண்டு கொள்ளவில்லை. இப்போது ஆர்பாட்டம் செய்தவர்கள் அன்று ஏன் வாய் மூடி,  கருணாநிதியின் பின்னால் நின்றார்கள்?

தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி இருந்த போது, 1974ல்  மைசூர் அரசுக்கும், தமிழ்நாட்டிற்கும்,  காவிரி பிரச்சினை சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.  பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த சாதிக்பாட்சா, பெங்களூருவில் நடந்த பேச்சு வார்த்தையில், கர்நாடக அரசு 488 டி.எம்.சி. தண்ணீர் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளது.  இது சம்பந்தமாக பெங்களுரில் இரண்டு நாட்கள் நடந்த பேச்சு  வார்த்தையில்,  இறுதி வடிவம் கொடுக்கும் சமயம், கண் ஆப்ரேஷன் செய்து ஓய்வில்  இருந்த கருணாநிதியிடம், ‘கர்நாடக அரசு 488 டி.எம்.சி தண்ணீர் கொடுக்க ஒப்புக் கொண்டார்கள்; கையெழுத்து போடலாமா?’  எனக் கேட்டபோது  ‘கையெழுத்துப் போட வேண்டாம் வந்து விடுங்கள்’ எனக்  கூறியவர் கருணாநிதி.

இதன் காரணமாக காவிரி ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மன்னார்குடி ரங்கநாதன் தலைமையில், ‘எங்களது உரிமையை நிலைநாட்ட நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்’ என்ற கோரிக்கையுடன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள்.  இதற்கு இடையில் குறுக்குச்சால் ஓட்டுவதற்கு அன்றைக்கு அமைச்சாரக இருந்த மன்னை நாராயணசாமி, தன் மருமகன் முரசொலி மாறன், இருவரையும் தமிழக அரசின் சார்பாக மூன்று மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய  வைத்து, ரங்கநாதன் போட்ட வழக்கில் தங்களையும் இணைத்துக்கொள்ள மனு போட்டவர் கருணாநிதி.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது, சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல் 1971ல் வந்தது.  அச்சமயத்தில் தி.மு.க.-காங்கிரஸ் தேர்தல் கூட்டணி ஏற்பட்டவுடன், தன் மீது சர்க்காரியா கமிஷன் கொடுத்த பரிந்துரையை வைத்து இந்திரா காந்தி வழக்குத் தொடுத்து விடுவாரோ என்ற அச்சத்தின் காரணமாகவும் தானாகவே ஒரு புதிய உத்தியை உருவாக்கி அதாவது, தமிழக, கர்நாடக, கேரள மாநில முதல்வர்களின் பேச்சுவார்த்தை கூட்டத்தை இந்திரா காந்தி ஏற்பாடு செய்வதாகவும் அதில் கலந்து கொண்டு சுமுகமான தீர்வுக்கு வரலாம், என் மீது நம்பிக்கை வைத்து வழக்குகளைத் திரும்பப் பெறுங்கள் எனவும் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் இவரின் செயலால் பிரச்சினைக்கு சுமுக தீர்வு எட்டப்படவில்லை.

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி பிளவு பட்ட போது, காமராஜர் அணியில் இருந்த நிஜலிங்கப்பாவை வீழ்த்தி, தனது ஆதரவாளர் தேவராஜ் அர்ஸை முதல்வராக்கத் திட்டமிட்ட இந்திரா காந்தி, தி.மு.க.வுடன் கூட்டுச் சேர்ந்து காவிரிச் சிக்கலை கர்நாடகத்திலும் அரசியலாக்கிவிட்டார்.  இதற்கு உறுதுணையாக இருந்தவர் கருணாநிதி என்பதை மறந்துவிட்டு, ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் முன் ஆர்பாட்டம் செய்யும் அமைப்பினர் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எம்.ஜி. ராமச்சந்திரன் முதல்வராக இருந்த போது, சட்டமன்றத்தில் நடுவர் மன்றம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது, நடுவர் மன்றமே தேவையில்லை, நடுவர் மன்றத்தால் தீர்ப்பு வர காலதாமதமாகிவிடும் என கோரிக்கை விடுத்தவர் கலைஞர்.  இதை  எதிர்த்து கருணாநிதிக்கு எதிராக திருவாரூரில் ஆர்பாட்டம் நடத்தி கைதானவர் வீரமணி.  இவர்களின் இருவரின் சித்து விளையாட்டை மறந்து ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் முன் ஆர்பாட்டம் நடத்துகிறார்கள் சில கைக்கூலிகள்.

1969ல் கருணாநிதி முதல்வராக பதவியேற்ற காலத்தில், அப்போதைய கர்நாடக முதல்வர் வீரேந்திர பாட்டீல் கண்ணம்பாடிக்கு மேல், ஹேமாவதி ஆற்றில் 34 டி.எம்.சி. நீர் கொள்ளளவு கொண்ட அணை, ஹேரங்கி ஆற்றில் 6 டி.எம்.சி. கொள்ளவு கொண்ட அணை, கேரளத்தில் உற்பத்தியாகி கர்நாடகம் வழியாக வரும் கபினி ஆற்றில், 19 டி.எம்.சி தண்ணீர் கொள்ளளவு கொண்ட அணை என மூன்று அணைகள் கட்டியபோது, அதை தடுக்க முறையான நடவடிக்கை எடுக்காத கருணாநிதியின் இல்லத்தின் முன் ஆர்பாட்டம் நடத்த வேண்டியவர்கள் இவர்கள், ஏன் நடத்தவில்லை?

1989ல் மன்னார்குடி ரங்கநாதன் தொடுத்த வழக்கின் அடிப்படையில் நடுவர் மன்றம்  அமைக்கப்பட்டு, நீதிபதி சித்தகோஸ் முகர்ஜி உள்ளிட்ட நீதிபதிகளின் தலைமையில் அமைக்கப்பட்ட நடுவர் மன்றம், விசாரணையை தொடங்கியபோது,  தமிழகத்திற்கு சார்பாகவே தீர்ப்பு வழங்குவார்கள் எனவே இவர்கள் விசாரணையை தொடங்க கூடாது என வழக்குத் தொடுத்தவர் தான் தேவகவுடா. முகர்ஜிக்கு அடுத்து அவருக்கு கீழிருந்த நீதிபதி என்.எஸ்.ராவ் தலைமைப் பொறுப்புக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், தேவகவுடாவின் விருப்பத்திற்கு ஏற்ப நடுவர் மன்றத்தின் நீதிபதியாக என்.பி.சிங் என்பவரை நியமனம் செய்தபோது, கருணாநிதி இச்செயலை கண்டிக்கவில்லை. இவ்வாறு நடந்துகொண்ட  தேவகவுடா, பிரதமர் பதவிக்கு வர முழு ஆதரவு கொடுத்தவர் கருணாநிதி.  ஆர்பாட்டத்தை நடத்தும் அமைப்பினர், தமிழன் வாயில் தொடர்ந்து மண் போடும் கருணாநிதியின் வீட்டுக்கு முன் அல்லவா ஆர்பாட்டத்தை நடத்தியிருக்க வேண்டும்?

மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகித்தபோது முரசொலி மாறன், டி.ஆர்.பாலு, ஆ.ராஜா, தயாநிதி மாறன் போன்றவர்கள், மத்திய அமைச்சர்களாக வலம் வந்தவர்கள்.  உண்மையில் கருணாநிதிக்கு காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமையை மீட்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்குமேயானால், அன்று மத்திய அரசிடம் நீர்வளத் துறையைக் கேட்டுப் பெற்று இருக்க வேண்டும்.  வேட்டி கட்டிய கலைஞர் மத்திய அரசை நடத்துகிறார், பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் கொண்டவர் என வாய் கிழிய துதி பாடியவர்கள்,  அதிக வருவாய் உள்ள தொலைத் தொடர்புத் துறை, தொழில் துறை, கப்பல் kalaingarபோக்குவரத்துத் துறை எனக் கேட்டுப் பெற்றுக் கொண்டதன் ரகசியம் என்ன என்று எப்போதாவது இந்த ‘தமிழர்’ அமைப்பினர் கருணாநிதியை கேள்வி கேட்டார்களா?

சொக்கத் தங்கம் சோனியா காந்தி, ஆமாம் சாமி மன்மோகன் சிங் ஆகியோர் ஆட்சியில், அதாவது 10 ஆண்டுகாலமாக மத்திய அரசில் அமைச்சராக வலம் வந்தவர்கள், கருணாநிதி உச்சம் பெற்று இருந்த சமயத்தில், நாடாளுமன்றத்தில் காவிரி பிரச்சினையை உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவர்கள் கோரிக்கை வைத்தார்களா?

1990ல் உச்ச நீதிமன்றம் நடுவர் மன்றம் அமைக்க உத்தரவிட்ட பின்னர், ஆர்பாட்டம் நடத்தும் அமைப்பினர், 24 ஆண்டுகள் வாய் மூடி மௌனியாக இருந்துவிட்டு, தற்போது ஆர்பாட்டம் நடத்துவது, தமிழர்கள் மீதுள்ள அக்கறை கிடையாது.  மத்தியில் உள்ள மோடியின் ஆட்சியின் மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தை தவிர வேறு ஒன்றுமில்லை.

கர்நாடகாவில் ஆட்சியில் இருப்பது காங்கிரஸ் கட்சி, கலவரம் நடந்தபோது, அதை தடுத்திருக்க வேண்டியது காங்கிரஸ் அரசு; தமிழர்களின் சொத்துக்களை சூறையாடியபோது ஆட்சியில் காங்கிரஸ் கட்சியினர்தான்; தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்கமாட்டோம் என வீர உரை நிகழ்த்துபவர்கள் காங்கிரஸ் கட்சியை சார்ந்த அமைச்சர்கள்தான்.  ஆகவே இவ்வளவு கொடுமைகளுக்குக் காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் முன்னால் ஆர்பாட்டம் நடத்த வேண்டியவர்கள், அவர்களுக்கு வெண்சாமரம் வீசுவது, பச்சை சந்தர்ப்ப வாதம்.