கோயில்களை படுகொலை செய்யும் ஹிந்து அறநிலையத் துறை: கொள்ளையடிப்பவர்கள் சூறையாடுகிறார்கள்!

சமீபத்தில் இரண்டு கோயில்களில் ஆகம விதிகளையும் சிற்ப சாஸ்திர விதிகளையும் மீறி செய்யப்பட்ட மராமத்து பணிகளை ஐ.நா சபையின் தொல்பொருள் பாதுகாப்பு பிரிவு ‘யுனஸ்கோ’ கடுமையாக கண்டித்திருக்கிறது. இந்த கண்டனங்கள் பத்திரிகைகளின் ஒரு பத்தி செய்தியாக வெளிவந்து எந்த அமைப்புகளின் கண்ணிலும் படவில்லை. யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. தந்தி டிவியில் மட்டும் ஒரு விவாதம் நடந்தது.

அரசே ஹிந்து ஆலயங்களை விட்டு வெளியேறு”, அரசே ஹிந்து ஆலயங்களை ஹிந்து அறவோரிடம் ஒப்படை”, கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களை உடனே வெளியேற்று”, கோயில்களில் கிடைக்கும் வருமானங்களை கோயில்களுக்காக மட்டுமே செலவு செய்”

இந்த கோஷங்களை, கோரிக்கைகளை ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து இயக்கங்கள் கடந்த 35 ஆண்டு காலமாக தொடர்ந்து எழுப்பி வருகிறது. என்ன செய்து என்ன பலன்?

காரணம், மதம், கடவுள், ஆன்மிகம் இவைகளை பற்றி கவலைப்படும் நமக்கு, கோயில்களின் ஆகமம், சிற்ப சாஸ்திரம், பழம்பெருமை, அதன் பாதுகாப்பு பற்றிய கவலையோ இல்லை என்றுதான் நான் கவலைப்படுகிறேன்.

தெருவோரத்தில் வைக்கப்பட்டுள்ள கோயிலை அகற்றும்போது காட்டும் எதிர்ப்பு, 1000 ஆண்டு பழமை வாய்ந்த கோயிலின் கல்தூண்கள் அகற்றப்படும்போது, ஓவியங்கள் அழிக்கப்படும்போது, சிற்பங்கள் சிதைக்கப்படும்போது காட்டப்படுவதில்லை.

கோயில்களில் நடக்கும் மராமத்து வேலைகள் நம் வீட்டில் நடப்பது போல நினைத்து, ‘யாரோ செய்கிறார்கள், எதற்கோ செய்கிறார்கள், அப்பாடா இப்போதாவது புத்தி வந்ததே கொஞ்சம் ஓட்டையை அடைக்கிறார்கள்’ என நாம் மந்தமாக சிந்தனை செய்கிறோம்.

திராவிடக் கட்சிகள் என்றைக்கு தமிழகத்தின் அரசாங்கத்தை கைப்பற்றியதோ, அன்றே கோயில் சொத்து கொள்ளை ஆரம்பமானது. நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது என்பது மட்டுமல்ல, நம் பண்பாட்டின் மூல்யங்கள் அழிக்கப்பட்டும் வருகிறது.

இதன் ஒரு பகுதிதான் கடந்த வாரம் வெளிவந்துள்ளது. அதையும் நமக்கு தெரியப்படுத்தியது யுனஸ்கோ அமைப்பின் அறிக்கைதான். அதுவும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டின் புராதனமான, பழம்பெருமை வாய்ந்த தமிழ்நாடு தொல்பொருள் துறைக்குட்பட்ட 37 கோயில்களில் ஆய்வு செய்யப்பட்டு 10 கோயில்களின் அறிக்கை கொடுக்கப்பட்ட சாராம்சம் வெளியானதால் நமக்கு தெரியவந்தது.

உதாரணமாக, உலகத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை உள்ளது. இதுபோன்று உலகம் முழுவதும் 30 இடங்களில் இந்த பரிந்துரை உள்ளது. சுமார் 14 கோபுரங்கள், இரண்டு தங்க விமானங்கள், 33,000 சிற்பங்கள் என்று சிறப்பு பெற்ற இக்கோயிலை தமிழ்நாடு அரசு, இதன் பெருமைகளை தகர்க்கும் வண்ணம், பொற்றாமரை குளத்தை சுற்றியிருந்த 16ம் நூற்றாண்டில் திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட 74 கல்தூண்களை அகற்றி, அதற்கு புதிதாக கல்தூண்கள் போடப்பட்டிருக்கிறது. இதற்கு சொல்லப்படும் காரணம், தூண்கள் பழசாகி விட்டது, கோயிலின் மேற்பரப்பில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பது.

இது ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுதான் செய்யப்பட்டது என்பது கோயில் தரப்பு வாதம்.

ஆனால் ஆகம சாஸ்திர விதிகள், சிற்ப சாஸ்திர விதிகள் மீறப்பட்டுள்ளன. கல்தூண்களை மாற்றியது இவற்றிற்கு எதிரானது என இவ்விதிகளின் எக்ஸ்பர்ட் முத்தையா ஸ்தபதி சொல்கிறார். இவர் உலகம் முழுவதும் 32 கோயில்களை கட்டியவர். அமெரிக்காவின் ஹுஸ்டன் மீனாட்சி கோயில் முதல் லண்டன் மகாலட்சுமி கோயில், நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில், ஸ்ரீலங்காவில் 67 அடி புத்தர் சிலை என பிரசித்திபெற்ற கோயில்களின் சிற்பக்கலை ஆசான் இவர்.

மதுரை மீனாட்சி கோயில் புனருத்தாரண கமிட்டியிலும் இவர் இருக்கிறார். இவரை ஆலோசிக்காமலே அத்தனை மாற்றங்களையும் நடத்தியுள்ளனர். காசுக்காக பழம் பெருமைகளை விற்றிருக்கிறார்கள். இதே கருத்தை யுனஸ்கோ உண்மை கண்டறியும் கமிட்டியும் தனது அறிக்கையில் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

இதைப்போலவே மற்றொரு கொடுமையும் நடந்துள்ளது. குடந்தை அருகிலுள்ள மானம்பாடி நாகநாத கோயில் முழுவதுமாக இடிக்கப்பட்டிருக்கிறது. இது ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது. முதலாம் ராஜேந்திர சோழன் தன் முடிசூட்டு விழா நினைவாக கட்டியது என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

தமிழ்நாட்டின் ஹிந்து அறநிலையத் துறையின் கீழ் 36,425 கோயில்கள் உள்ளன. இவற்றின்  சொத்து, வருமானம் கொள்ளையடிக்கப்படுகிறது என்பது மட்டும்தான் வெளியே தெரிகிறது. ஆனால் நம் முன்னோர்களால் வளர்க்கப்பட்ட நமது கலாச்சார, பண்பாட்டை பறைசாற்றும் ஆதாரங்களான சிற்பம், ஓவியம் அழிக்கப்படுகிறது அல்லது கடத்தப்பட்டு விற்கப்படுகிறது.

உலகம் முழுவதும் மக்கள் தங்கள் புராதனங்களை அதன் சின்னங்களை பெருமையோடு பாதுகாக்கின்றனர். ஆனால் உலகமே போற்றும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் பிரகாரத்தில் ஆகம விதிகளுக்கு எதிராக விருந்தினர் விடுதியும் டாய்லெட்டும் தமிழ்நாடு ஹிந்து அறநிலையத்துறை கட்டியுள்ளது.  எனவே நம்முன் உள்ளது இரண்டு மிகப் பெரும் அபாயம். ஒன்று கோயில் சொத்து கொள்ளை போவது, இரண்டு நம் கலாச்சாரம், பண்பாட்டின் ஆதாரமான கோயில்கள் இதிலுள்ள சிற்பம், ஓவியம் அழிக்கப்படுவது அல்லது மாற்றப்பட்டு விலைக்கு வெளிநாட்டில் விற்கப்படுவது.

முகம்மது நபியின் தலைமுடியில் ஒருமுடி காஷ்மீர் மசூதியில் காணாமல் போனதாக சொல்லப்பட்டு, இந்தியாவே ரணகளமானது. மீண்டும் அது கிடைத்து அங்கு வைக்கப்பட்டபோது அது உண்மையானதா, போலியா என ரசாயன பரிசோதனை செய்யப்பட்டது. அதுபோல நாம் பொங்க வேண்டாம். மங்காமல் இருந்தால் போதும்.

நம் பண்பாட்டின் ஆதாரங்களை, களவாடி கடத்தி அழிக்கும் தமிழ்நாடு ஹிந்து அறநிலையத்துறைக்கு சம்மட்டி அடி கொடுக்க என்ன செய்ய வேண்டுமோ செய்வோம். நான் எனது பங்குக்கு கட்டுரை எழுதிவிட்டேன். மத்திய கலாச்சார துறை அமைச்சர் டாக்டர் மகேஷ் சர்மாவை நேரில் சந்தித்து, தமிழக அறநிலையத்துறை அமைச்சரை உடனடியாக டெல்லி வரவழைத்து ‘புத்தி சொல்லுங்கள்’ என்று கோரிக்கை வைத்துள்ளேன்.

 

 

 

ஹிந்து ஆலய அராஜகத் துறை

டூ    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தூண்கள் மாயம்.

டூ    குடந்தை மானம்பாடி நாகநாத சுவாமி கோயில் தரைமட்டம்.

டூ    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் பிரகாரத்தில் டாய்லெட்!