கேவலம்,வெக்கக் கேடு இந்த அவலத்துக்கு வேறு சொல்?

ஒரு புதிய தமிழ் சினிமா வெளியாகியதை முன்னிட்டு தியேட்டருக்கு வெளியே நடுரோட்டில் நின்று கொண்டு சில இளைஞர்கள் கொட்டமடித்துள்ளார்கள். அந்த வழியாக வந்த புலனாய்வு காவல் துறை ஆய்வாளர் அம்பேத்கர் அவர்களை அழைத்து கண்டித்ததுடன், ஒரு மன்னிப்புக் கடிதமும் எழுதிக் கொடுக்கச் சொன்னார். அவர்கள் ஆறுபேரும் கல்லூரி மாணவர்கள். தமிழில் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார்கள். கடிதத்தை வாங்கிப் பார்த்த அம்பேத்கர் அதிர்ச்சி அடைந்தார். அதில் ஒரு மாணவர்கூட தவறு இல்லாமல் கடிதம் எழுதவில்லை. நமது மாநில கல்வித் திட்டம் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று அம்பேத்கர் வருத்தப்பட்டார். இந்த செய்தி செப்டம்பர் 24 அன்று “இந்தியன் எக்ஸ்பிரஸ்“ நாளிதழில் வெளிவந்துள்ளது
இதே போன்று ஒரு செய்தி செப்டம்பர் 30-ம் தேதி “தி ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ளது. தமிழக அரசின் உயர் கல்வித்துறை,கல்லூரி மாணவர்களுக்கு தமிழைக் கற்றுக் கொடுக்க திட்டமிட்டுள்ளது என்பதாகத்தான் அந்த செய்தி. பன்னிரெண்டு ஆண்டுகள் பள்ளியில் படித்து கல்லூரியில் சேருகின்ற மாணவனுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது என்றால் இது வெட்கக் கேடானது.
தமிழகத்தில் சில வீடுகளில் ‘‘இங்கு ஹிந்தி கற்றுக் கொடுக்கப்படும்’’ என்ற போர்டு இருக்கும். இதுபோல வருங்காலத்தில் ‘‘இங்கு தமிழ் கற்றுக் கொடுக்கப்படும்’’ என்று போர்டுகள் காணப்பட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
தமிழகத்தில் ஒருவர் தமிழே படிக்காமல் முனைவர் பட்டம் வரை வாங்கலாம் என்ற சூழ்நிலை உள்ளது. இது மாற்றப்பட வேண்டும். தாய்மொழி கல்வியின் அவசியம் பற்றி ஆர்.எஸ்.எஸ் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.
தமிழகத்தில் உயர்கல்விக்கு ஒரு அமைச்சர், தொடக்கக் கல்விக்கு ஒரு அமைச்சர் என்று அமைச்சர் கூட்டத்திற்கு குறைச்சல் இல்லை. தமிழ்தான் தடுமாறுகிறது. இந்த அவலத்துக்குப் பொறுப்பேற்று துறை அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தாலும் ஆச்சரியமில்லை.