* குரு தத்துவம்
* சரணாகதி தத்துவம்
* கூட்டு வழிபாட்டுத் தத்துவம்
சுவாமி ஐயப்பன் வழிபாட்டில் எத்தனையோ தத்துவங்கள் இருப்பினும் அவற்றுள் இந்த மூன்று முக்கியம்
குரு தத்துவம், சரணாகதி தத்துவம் ஆகியன சனாதன தர்மமான ஹிந்துமதத்தில் சிறந்த இடம் பெற்றுள்ளாதால் நாம் அவை பற்றி பலவகைகளில் தெரிந்து கொண்டிருக்க முடியும். ஆனால் மூன்றாவதான கூட்டு வழிபாட்டுத் தத்துவம் என்பது ஹிந்து மதத்தில் இல்லாத ஒன்று என்றுதான் பெரிதும் நம்பப்படுகிறது. நாமாகக் கோயிலுக்குப் போகிறோம், நினைத்த நேரத்தில் வழிபடுகிறோம், அர்ச்சனை செய்கிறோம் எனும் போதும் ஹிந்து தர்மம் தனிமனிதனின் ஆன்மிக உயர்வு பற்றியே அதிகம் போதிக்கிறது எனும் போதும் இங்கு ஏது கூட்டுவழிபாடு, அதன் பலன்கள் என்ன என்ற கேள்விகள் எழாமல் இல்லை. உண்மை என்ன?
திருப்பாவை பாடிய ஆண்டாள் அந்த மாயவனைக் காணச் செல்வதற்கு தெருவில் உள்ள அனைத்து தோழியரையும் எழுப்பி அழைப்பதே திருப்பாவையின் முதன்மைச் செய்தி. மார்கழி மாதமே கூட்டுவழிபாட்டுக்கான மாதம் தான். முப்பது பாவைப் பாடலும் கூட்டுவழிபாட்டுப் பாடல்கள்தாம். நாராயணன் நமக்குப் பறைதருவான் என்ற துவக்கம் முதல் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் என்பது வரை தனி ஒருவருக்கான பலனைக் கூறுவதாக அது அமைக்கப்படவில்லை.
பஜனைகளும் கூட்டுவழிபாடே. பஜனைகளுக்கென சம்பிரதாயங்கள் உள்ளன. வைணவக் கோயில்களில் சாற்றுமுறை சேவிப்பதை கோஷ்டி என்றுதான் கூறுகிறார்கள். நாலாயிரத்தை சேவிக்கும்போது எந்தக் கோயிலிலும் யாரும் தனியாக சேவிப்பதில்லை. கோஷ்டிதான், கூட்டுவழிபாடுதான் அது (அக்காரவடிசலும் புளியோதரையும் வாசகர்களுக்கு நினைவிற்கு வந்தால் அதற்குக் கட்டுரையாளர் பொறுப்பல்ல).
ராமகாதையை தமிழில் பாடிய கம்பன் தனது முதல் பாடலில் அன்னவர்க்கே சரண் நாங்களே என்றே தொடங்குகிறான். அன்னவர்க்கு நான் சரண் என்று ஆரம்பிக்கவில்லை.
பெரிய புராணம் பாடிய சேக்கிழார் நடராஜப் பெருமான் எடுத்துக் கொடுத்த முதல் அடியான ‘உலகெலாம்’ என்ற அடியோடு துவங்கி மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் என்றே அப்பாடலை நிறைவு செய்கிறார். தான் மட்டுமே வாழ்த்தி வணங்குவதாகக் கூறவில்லை. இறைவனால் கொடுக்கப்பட்ட முதல் அடி அது என்பதால் அதுவே பெரிய புராணத்தின் முதல் பாடலாய் விளங்குகிறது.
சிவபுராணம் பாடிய மாணிக்கவாசகர் ஈசன் அடி போற்றி, எந்தை (எம் தந்தை ) அடிபோற்றி எனத் தொடங்குகிறார். தொடர்ந்து சீரார் பெருந்துறை ‘நம்தேவன்’ அடிபோற்றி என்றே கூறுகிறார். எங்கும் தனிமை இல்லை. எல்லாம் கூட்டுவழிபாடே.
விஸ்வாமித்திரன் நமக்கு அருளிய காயத்ரி மந்திரம் எங்கள் அறிவை மேம்படுத்தட்டும் என்று கூறுகிறதே தவிர எனது அறிவை மேம்படுத்தட்டும் எனக் கூறவில்லை.
பதினாறு செல்வங்களில் மிக உயர்ந்த செல்வமாக அபிராமி பட்டர் கருதுவது தொண்டரோடு கூட்டு” என்பதுதான்.
வேதங்கள் சொன்ன யாகங்கள் மிகத் தெளிவான கூட்டு வழிபாடு. பாடசாலைகளில் கற்றுக் கொடுக்கப்படும் வேத மந்திரங்கள் அனைத்தும் கூட்டுவழிபாட்டிற்கானவையே. இயற்கை தெய்வங்களை அழைக்கும் ஆராதிக்கும் அனைத்து மந்திரங்களும் கூட்டு வழிபாட்டிற்குரியவையே.
கோயில்களில் நடைபெறும் காலை மாலை பாராயணங்களில் சகஸ்ரநாமம், ருத்ரம் கூட்டாகத்தான் நடைபெறுகிறது. வயது முதிந்த பலர் இதில் கலந்து கொள்ளவே கோயில் செல்கின்றனர் என்பதை நாம் பார்த்திருக்க முடியும்.
கூட்டுவழிபாடு ஹிந்து மதத்தின் உயிர்நாடி. அபிராமி பட்டர் ‘தொண்டரோடு கூட்டு’ என்றதை ஆதிசங்கரர் ‘சத்சங்கம்’ என்கிறார்.
சரி, ஐயப்பனுக்கு வருவோம்.
குழு இல்லாது தனியாக மலைக்கு பயணிப்பதை ஐயப்ப வழிபாடு ஏற்கவில்லை. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு குழுவிலும் ஒரு கன்னி ஐயப்பனின் சேர்க்கை சிறப்பு. அதாவது, குழுவின் எண்ணிக்கையை அதிகரிப்பது சொல்லப்படாத கூட்டு வழிபாட்டு விதி.
இதன் காரணமாக ஐயப்பன் வழிபாட்டில்
* ஏழை பணக்காரர் வித்தியாசம் தோன்றுவதில்லை.
* படித்தவர் படிக்காதோர் வித்தியாசம் தோன்றுவதில்லை.
* உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி எனும் வித்தியாசம் தோன்றுவதில்லை.
* வல்லவன், வலுவற்றவன் என்ற வித்தியாசம் தோன்றுவதில்லை.
* மாலை தரித்த அந்த நிமிடமே ஒவ்வொருவரும் ஐயப்பனாக மாறி விடுகின்றனர்.
பின்னர் ஏது வித்தியாசங்கள்? ‘தத்வமஸி’ போதிக்கும் ஐயப்ப வழிபாடுதான் சரணாகதி தத்துவத்தையும் கூட்டுவழிபாட்டுத் தத்துவத்தையும் போதிக்கிறது. தன்னை உணராமல் தரணியை உணரமுடியாது அல்லவா? இதற்கான கருவி கூட்டுவழிபாட்டுக் கருவி. இதைத்தான் அரியையும் அரனையும் இணைத்த ஐயப்ப தத்துவம் போதிக்கிறது.