குருபெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்

தனுசு :

நற்பண்புகளைக் கடைபிடிக்கும்  தனுசு ராசி அன்பர்களே!

செல்வாக்கை அதிகரிப்பதையும், செல்வத்தை பாதுகாப்பதிலும் தனித்திறன் மிக்கவர்கள். நேர்மையை அனைத்து இடங்களிலும் நடைமுறைப்படுத்தும் நீங்கள், அதிகாரத்தையும் விரும்புவீர்கள். சமமான அந்தஸ்து மிக்கவர்களிடம் மட்டும் பழகும் நீங்கள் இரக்க குணமும் கொண்டவர்கள். வாழ்வின் அனைத்து நலன்களையும் பெற்று வாழ்வீர்கள்.

உங்களின் தனுசு ராசிக்கு அதிபதியும் சுகஸ்தானமான நான்காம் இடத்துக்கு  அதிபதியும் ஆன குருபகவான் 12ம் இடத்தில் சஞ்சரித்துவிட்டு தங்களின் ராசிக்குள் அடியெடுத்து வைக்கிறார். ஏழரைச் சனியில் ஜென்மச் சனி, கேது ஆகியோருடன் குருவும் இணைந்துள்ளதால் ஜென்ம குரு பாதிப்பு உங்களுக்கு ஏற்படாது. ஏழில் உள்ள ராகுவை குரு நோக்குவதால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

உங்களுக்கு பாதகமாக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். அதிச்சாரமாக மகரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் உங்களுக்கு மிகப்பெரிய நன்மைகள் நடைபெறும். எதிர்பாராத இடத்திலிருந்து பணவரவு கிடைக்கும். பூர்வீக சொத்திலிருந்து வருமானம் வரலாம். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை பெற முடியும். விரோதிகளாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். சனி பகவானின் வக்கிர காலத்தில் தீயப்பயன்கள் குறையும். கேது–ராகு இடமாறுதல்களால் ஓரளவு நல்ல மாற்றங்கள் நிகழும்.

கோசாலைக்குச் சென்று வணங்கிடுங்கள்!

உத்தியோகஸ்தர்கள்:

நண்பர்களின் உதவியோடு உங்களின் வளர்ச்சிக்கு வழி கிடைக்கும். அதிக வேலையும் அதனால் ஏற்படும் அலுப்பும் இருந்தாலும், உங்களின் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். ஊதிய உயர்வு, ஊக்கத்தொகை ஆகியவை கிடைக்கும். சில சலுகைகள் பெற்று மகிழ்ச்சி அடைய முடியும் என்றாலும், சிலருக்கு இடமாற்றமும் கிடைக்க வாய்ப்புள்ளது.

பெரும்பாலான கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும், குருவின் மகர ராசிக்குள் அதிச்சாரமாக செல்லும் காலமும், கேது, ராகு பெயர்ச்சியும், சனியின் ராசிக்குள்ளேயே நிகழும் வக்கிர காலத்திலும் சில நல்ல மாற்றங்கள் நிகழும். குருவின் இருப்பிடம் தரும் பலனை விட அவரின்  பார்வைபடும் இடமெல்லாம் புனிதமாகிறது என்பதால் 5,7,9ம் இடங்களால் உங்களுக்கு வளர்ச்சியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்து கொள்ளுங்கள். சக ஊழியர்களிடம் நன்றியுடன் இருங்கள்.

பெண்மணிகள்:

குடும்பத்தின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்படுவீர்கள். அதே சமயம் பணியினால் ஏற்படும் பெயர்ச்சி  காரணமாக  கடுஞ்சொற்கனை பேசி விடாதீர்கள். பொறுமையுடனும் புன்னகையுடனும் செயலாற்றினால் குடும்பத்தினரால் போற்றப்படுவீர்கள்.

இளம் பெண்களின் விருப்பத்தின் படி இனிய இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கலாம். இல்லறத் துணையுடன் இணக்கமாக இருக்க முடியும். புத்திரகாரகன் குரு பார்வையால் புத்திர பாக்கியம் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி பெருமிதப்படுவீர்கள். விலையுயர்ந்த பொருட்களை பாதுகாக்கவும்.

மாணவமணிகள்:

பழக்க வழக்கங்களை நல்ல விதமாக மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்வது  அவசியம். கலை நிகழ்ச்சிகள், போட்டி பந்தயங்களில் குரு அருளால் பரிசுகள் கிடைக்கும். உயர் கல்விக்கு வேண்டிய ஏற்பாடுகள்  வெற்றி கிடைக்கும். வெளிநாட்டு கல்விக்கு முயற்சி செய்யும் போது நன்கு விசாரித்து புரிந்து கொண்டு செய்ய வேண்டும்.

சிறுதொழில், வியாபாரம்:

போட்டியாளர்களை சமாளித்துதான் தொழிலை செய்ய வேண்டும். பெண்களை பங்குதாரராகச் சேர்த்துக்கொண்டு வியாபாரம் செய்தால் தொழில் விருத்தியடையும்.

வரவு செலவு கணக்கு முதல் கொள்முதல், விற்பனை தயாரிப்பு என அனைத்தையும் நேரடியாக கவனிப்பது அவசியம். ஓய்வின்றி உழைத்தால் தான் ஏமாற்றங்களிலிருந்து தப்பிக்க முடியும். தொழில் முன்னேற பங்குதாரர்களிடம் இணக்கமாக நடந்து கொள்வது அவசியம்.

அரசியல்வாதிகள்:

கடின உழைப்புக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்க சற்று தாமதமாகும். தங்களின் திட்டங்களை ஒவ்வொரு படியாக ஒவ்வொரு அடியாக நிதானமாக எடுத்து வைத்தால் உங்களின் எண்ணம் நிறைவேறும். தலைமையின் நேரடி பார்வையில் படும்படி உங்களது செயல்கள் இருப்பது அவசியம். இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்களைத் தாண்டி, மெதுவாக முன்னேற முயற்சி அவசியம்.

பரிகாரம்:

ஏழுமலையானை கசிந்துருகி வழிபட்டால் ஏற்றமும், எழுச்சியும் கிட்டும்.

கும்பம் :

நம்பிக்கையை அளித்து உற்சாகம் தரும் கும்பராசி அன்பர்களே!

ஆன்மிகச் சிந்தனை அமைதியைத் தரும் என்ற நம்பிக்கை கொண்ட நீங்கள் ஆற்றலுடன் செயல்படுவீர்கள். அறிவாற்றல் மிக்கவர் என்றாலும் அடக்கத்துடன் இருப்பீர்கள். புகழ்ச்சியை விரும்பிய போதும் எச்சரிக்கையுடன் இருப்பீர்கள்.

உங்கள் ராசிக்கு 2, 11–க்குரிய குரு பகவான் இனி லாபஸ்தானமான 11–ம் இடத்திற்கு வருவது மிகப்பெரிய நன்மைகளை உங்களுக்கு வழங்குவதற்காகத் தான். இதுநாள் வரை தொழில், உத்தியோக ஸ்தானமான 10–ம் இடத்தில் அமர்ந்து பலவித அல்லல்களை அளித்தவர் குரு என்றாலும், இனி உங்களுக்கு அதிகளவில் நன்மைகளை அள்ளித் தரப்போகிறார். குரு அதிச்சாரம் பெற்று மகரராசிக்கு பிரவேசிக்கும் காலத்தில் மட்டும் செலவுகளை கட்டுப்படுத்திவிட்டால் சிரமங்கள் குறையும். தனக்காரகனாகிய குரு விரய ஸ்தானத்திற்கு வந்தால் வீண் செலவு ஏற்படும் என்பதால், சுபச் செலவுகளாக செய்வது நன்மை தரும்.

மேலும், ௧௧–ல் உள்ள சனியும், கேதுவும் உங்களுக்கு அதிகமான அளவு நற்பலன்களை வழங்கிட வேண்டிய நிலையில் உள்ளதால் கவலையின்றி உற்சாகமாக செயலாற்றுங்கள். தனுசு ராசிக்குள் வக்கிர கதியில் உலாவரும் காலத்தில் சனி பகவானால் நன்மை தர இயலாது. கேது விருச்சிகத்திற்கு செல்வதும் ஒரு குறைதான். ராகுவும் சில சங்கடங்களை ஏற்படுத்துவார் என்றாலும் குரு பகவானின் பார்வைகள் படும் இடங்களினால் தங்களுக்கு வருகின்ற இன்னல்கள் விலகிப் போய்விடும்.

வயதான தம்பதிகளை ஆதரிக்கவும்!

உத்தியோகஸ்தர்கள்:

உங்களுடைய வேலை தொடர்பான மாற்றங்களை சந்தித்து வந்த நீங்கள் இனி சிறந்த பொருளாதார மாற்றங்களைப் பெற்று மகிழலாம். உங்கள் லாப ஸ்தானமான 11–ம் இடமான தனுசு ராசியில் உள்ள சனிபகவான், கேது பகவான் ஆகியோருடன் குரு பகவானும் இணைந்து அருள்புரிகிறார்கள். உங்களது விருப்பங்கள் குருவின் பார்வை பலத்தினால் நிறைவேறும். சக ஊழியர்கள் உங்களுடன் நெருக்கமாக பழகி உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். செல்வாக்கு உயரும்.

குரு பகவான் அதிச்சாரமாக மகரத்திற்குள் உலாவரும் காலக்கட்டத்தில் நிதானமாக செயல்பட வேண்டும். அநாவசியமான செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். ஊதியம், பதவி உயர்வு ஆகியவை நடைபெற்றாலும் விருப்பமற்ற இடமாற்றம் நடைபெறலாம். சனியின் வக்கிர காலத்தில் நன்மைகள் குறையும். விலையுயர்ந்த  பொருட்களை பாதுகாக்கவும். அதே சமயம் செல்வாக்கு உயரும்.

பெண்மணிகள்:

உங்கள் ராசிக்குள் சஞ்சரிக்கும் சனி பகவான், கேது பகவான் ஆகியோரால் ஆடை, ஆபரணச் சேர்க்கை நடைபெறும். உங்கள் வளர்ச்சிக்கும் வழிகாட்டுதல்களுக்கும் வீட்டில் உள்ள பெரியவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சகோதர உறவுகள் சாதகமாக இருப்பார்கள். பணிபுரியும் பெண்களுக்கு சலுகைகள் கிடைக்கும். சனி பகவான் வக்கிர காலத்திலும் குருவின் அதிச்சார காலத்திலும் குடும்பத்தினருடன் இணக்கமாகவும், இல்லறத்துணையின் நலனில் அக்கறையுடன் இருப்பதும் நன்மை தரும். ராகு–கேது இடம் மாறுகின்ற காலமும் அவ்வளவாக நன்மை தருவதாக இல்லை என்பதால் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். சகோதரர்கள், தாயின் உறவினர்கள் வழியில் ஆலோசனையும் பரிசுகளும் கிடைக்கும். சிலருக்கு பூர்விக சொத்தில் பங்கு கிடைக்கும். வளர்ச்சி, தளர்ச்சியை நீக்கும்.

மாணவமணிகள்:

உங்களுடைய எதிர்காலம் குறித்த கவலையை தவிர்க்க முயற்சிக்கவும். சாதகமான நிலையில் சனி, கேது, குரு ஆகியோர் இருக்கும்போது உயர்ந்த லட்சியத்துடன் உங்களை வழிநடத்துவார்கள். மேல்படிப்புக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அயல்நாட்டு பல்கலைக்கழகங்களிலிருந்து அழைப்புகள் கிடைக்கும். கல்வியுடன் வருமானமும் கிடைப்பதால் சேமிக்கப் பழக வேண்டியது அவசியம். சனியின் வக்கிர காலத்திலும், குருவின் அதிச்சார நேரத்திலும், ராகு–கேது இடம் மாறும்போது ஏற்படும் சில ஏமாற்றங்களைத் தவிர்க்க செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். ஆசிரியரின் அறிவுரையை ஏற்று மதிப்பெண்கள் பெறலாம்.

சிறுதொழில், வியாபாரம்:

போட்டியாளர்களின் செயல்களால் பின்னடைவுகளை சந்தித்த உங்களுக்கு குருவின் ஆட்சிக் காலத்தில் தடைகளை தகர்த்தெறிந்து வெற்றியாளராக திகழ்வீர்கள். பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உபதொழிலை துவங்கவும் இதுவே சிறந்த தருணம். தொழிலாளர்களும் ஊழியர்களும் ஆதரவாக பொறுப்புடன் பணியாற்றுவார்கள். சனி வக்கிரம், ராகு–கேது மாற்றம், அதிச்சார குரு காலங்களில் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் முன்னேற்றத்தை தொடரலாம். அதேசமயம் உழைப்பு அதிகரிக்கும். வருமானத்தை அதிகரிக்கலாம்.

அரசியல்வாதிகள்: நெருங்கிய உறவினர்களை சற்று விலக்கி வைத்திருப்பது அவசியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். தலைமையின் ஆதரவு கிடைக்கும் காலங்களிலேயே கட்சிக்குள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும். இதுநாள்வரை தடைப்பட்டிருந்த சில பொறுப்புகள் கிடைக்கப்பெற்று பதவியும், வருமானமும் கிடைக்கப் பெறுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும்போது நிதானத்துடன் செயல்பட உறுதி தேவை.

பரிகாரம்:

அர்த்தநாரீஸ்வரரை அடிபணிந்தால் அகத்தில் ஆனந்தம் சதிராடும்.

மீனம் :

உள்ளன்புடன் உரையாடும் தன்மை கொண்ட மீன ராசி அன்பர்களே!

 

பல விஷயங்களிலும் தெளிவான சிந்தனை உடைய நீங்கள், அதனை தொடர்ந்து கடைபிடிப்பதில் தீவிரம் காட்ட மாட்டீர்கள். விரைந்து செயல்பட வேண்டிய நேரத்திலும் சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள் என்றாலும் நிதானமான உங்களின் போக்கு விமர்சிக்கப்படாது. பலன் கருதி செய்யும் உங்களின் செயலால் புகழ் கிடைக்கும். இனிய சொற்களால் அனைவரையும் மகிழ்விப்பீர்கள்.

உங்கள் மீன ராசிக்கும் தொழில், உத்தியோக ஸ்தானமான தனுசு ராசிக்கும் அதிபதியான குரு பகவான் தனுசுவில் ஆட்சி செய்யப் போகிறார் என்பதால் பதவிக்கு பங்கம் ஏற்படாது. தங்களின் ராசி அதிபதி தங்களுக்கு சாதகமாகத்தான் இருப்பார். ௫–ம் பார்வையாக மேஷத்தை நோக்கப் போவதால் வருமானத்தை காத்துக்கொள்ள முடியும். குருவின் இதர பார்வை பலத்தினால் தனலாபமும், கிடைக்கும். குருவின் அதிச்சார காலத்திலும், சனியின் வக்கிர காலத்திலும், ராகு–கேது பெயர்ச்சி காலத்திலும் சில சாதகமான மாற்றங்களை பெறப் போகிறீர்கள். வழக்குகள் சாதகமாகும். குறிப்பாக குருவின் அதிச்சார காலத்தில் அவர் லாபஸ்தானமான மகரத்தில் சஞ்சரிக்கும் போதும் ௩ம் இடமான ராகு ரிஷபத்தில் சஞ்சரிக்கும் நேரத்திலும் சில சுப காரியங்களை செய்து கொள்ள திட்டமிடவும். பொருளாதார வளம் கிடைக்கும் போது சேமித்து வைத்துக்கொள்ள திட்டமிடவும். அடுத்து வரும் சனி பெயர்ச்சி லாப ஸ்தானத்தில் அவர் சஞ்சரிப்பார் என்பதால் நிதானமாக செயல்பட்டு, சாதிக்க காத்திருக்கவும்.

குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபடுங்கள்!

உத்தியோகஸ்தர்கள்:

தற்போது நிலவும் கிரகங்களின் கணக்கின்படி பணியில் எச்சரிக்கையுடன் இருக்கவும். உங்களின் உழைப்பு அதிகரிக்கும். உயரதிகாரிகளின் ஆலோசனை பெற்றே அனைத்து பணிகளையும் செய்து வருவது நற்பெயரைக் காப்பாற்றும். தனித்து செயல்படாமல், அதிகாரிகளின் கையொப்பம் பெற்ற பின்பே பணிகளை செய்வது நல்லது.

அதிச்சாரமாக குரு பயணிக்கும் காலத்தில் உங்களின் ராசிக்கு லாபஸ்தானத்தில் இருப்பதால் உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலக நண்பர்களும், உறவினர்களும் உங்களின் மேன்மையை உணர்ந்து மீண்டும் உங்களின் நட்பை நாடி வருவார்கள். அலுவலகத்தில் முக்கிய பொறுப்பை ஏற்றுக் கொண்டு உற்சாகமாக பணியாற்றுவீர்கள். அலுவலகத்தில் சலுகைகளை அனுபவிப்பீர்கள். உங்களின் செயல்திறனால் பெருமிதம் அடைவீர்கள். தொடர்ந்து அனைவரிடமும்.

பெண்மணிகள்:

குடும்பத்தினருடன் இனிமையாக பழகவும், உறவினர் மத்தியில் ஏற்பட்ட பிணக்குகளை நினைவுப் படுத்திக் கொள்ளாமல் இருக்க பழகவும். குருவின் பார்வை தன, வாக்கு, குடும்ப ஸ்தானமான ௨–ம் இடத்தை புனிதப்படுத்துவதால் பொருளாதார சிக்கல்கள் உருவாகாது. தேவையான பொருட்கள் நிரம்பி வழியும். குருவின் அதிச்சார காலத்தில் இளம்பெண்களின் திருமணம் நடைபெறும். ஆரோக்கியம் ஏற்படும். உறவினர் வகையில் அனைவரும் உங்களை நாடி வருவார்கள். அடுத்து வரும் சனி பெயர்ச்சி காலத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். ஆபரணச் சேர்க்கையும், அசையா சொத்துகள் சேர்க்கையும் உண்டு. மழலை பாக்கியமும் கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்மணிகள் தனலாபத்தை பெறுவார்கள். கேது பகவான் சஞ்சார காலத்தில் எச்சரிக்கை அவசியம் தேவை.

மாணவ மணிகள்:

தேர்வு நேரங்களில் மட்டும் கவனம் செலுத்துவதை விட தினசரி பாடங்களில் கவனம் வைக்க வேண்டும். பாடங்களில் மதிப்பெண்கள் குறைவாகப் பெறுவதை அலட்சியம் செய்யக் கூடாது. அயராது பாடுபட்டு படித்தால்தான் வருங்காலம் வசந்தமாக இருக்கும். மன சஞ்சலம் எதிலும் பிடிப்பின்மை காரணமாக தளர்ச்சி அடையும் நேரத்தில் தியானம் கற்று பயிற்சி செய்வது நல்லது.

நண்பர்களின் பழக்க வழக்கங்களில் தீமைகளை கண்டு விலகி நிற்கவும். தேவையற்ற பொது விஷயங்களில், போராட்டங்களில் ஈடுபட வேண்டாம். எதிர்காலத்தில் இது பிரச்சினையைத் தரும். கல்வியின் மேன்மையை உணர்ந்து படிக்கவும்.

சிறுதொழில், வியாபாரம்:

பங்குதாரர்கள் ஒத்துழைப்பு குறையும். உடனிருந்தவர்களே போட்டியாளராக மாறுவார்கள். ஊழியர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து செயல்பட வேண்டும். வருமானம் குறையாது தனலாபம் குருவின் பார்வை பலத்தால் பெருகும். இந்த நேரத்தில் துணை நிறுவனம், கிளைகள் துவக்குவதை தவிர்க்கவும். நெருங்கிய உறவினர்களை தொழில் கற்றுக்கொள்ள பழக்கவும்.

குரு பகவானின் அதிச்சாரமாக மகரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் தொழில் விருத்தி பெறும். உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் வருத்தப்படும் அளவுக்கு வளர்ச்சி காண்பீர்கள். அடுத்து வரும் சனி பெயர்ச்சி காலத்தில் தொடர்ந்து முன்னேறுவீர்கள்.

அரசியல்வாதிகள்:

மக்கள் நலப் பணியில் ஈடுபட்டு புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள். சில சமயம் தலைமையின் ஆதரவு இன்றி தனித்து இயங்க வேண்டிய சூழலும் ஏற்படும். பதவியும், பணபலமும் உங்களை உயர்மட்டத்திற்கு அழைத்துச் செல்லும். தலைமைக்கு நெருக்கமாவீர்கள். சுற்றுப் பயணத்தால் பெருமிதம் அடைவீர்கள்.

பரிகாரம்:

கயலிணையால் கருணைமழைபொழியும். மீனாட்சியை வழிபட்டால் எண்ணங்கள் ஈடேறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *