சர்தார் வல்லபாய் படேலின் 144-வது பிறந்த நாள் தேச ஒற்றுமை நாளாக கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. குஜராத்தில் நர்மதா மாவட்டம், கேவாடியாவில் உள்ள வல்லபாய் படேலின் சிலைக்கு இன்று காலை பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
”ஜம்மு காஷ்மீர், லடாக் என புதிய யூனியன் பிரதேசங்கள் உருவாக்கம் எல்லைக் கோடு உருவாக்கப்பட்டதற்கான அர்த்தம் அல்ல. வலிமையான நம்பிக்கையின் உருவாக்கம். ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் புதிய எதிர்காலத்தில் அடியெடுத்து வைத்துள்ளன.
தேசத்தின் உணர்வு, பொருளாதாரம், அரசியல் சாசன ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்காக என்னுடைய அரசு பணியாற்றி வருகிறது. இல்லாவிட்டால், 21-ம் நாற்றாண்டில் வலிமையான இந்தியா என்பதை நாம் எண்ணிப் பார்க்க இயலாது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து, 370-வது பிரிவால் தீவிரவாதமும், பிரிவினைவாதமும்தான் இதுநாள்வரை அதிகரித்தது. போரில் நம்மை வெல்ல முடியாதவர்கள் (பாகிஸ்தான்) நம்முடைய நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்க முயல்கிறார்கள்.
தீவிரவாதத்தால் கடந்த 30 ஆண்டுகளில் 40 ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளார்கள். 370-வது பிரிவை நீக்குவதற்கு படேல்தான் எனக்குத் தூண்டுகோலாக இருந்தார். இந்த முடிவை நான் தேசத்தின் முதல் உள்துறை அமைச்சரான படேலுக்கு சமர்ப்பிக்கிறேன்.
தேசத்தின் வடகிழக்குப் பகுதிகள் பிரிவினையில் இருந்து தீர்வை நோக்கி நகர்ந்து வருகின்றன. தீவிரவாதம், நக்சலைட்டுகள் இருக்கும் பகுதியில் அமைதியையும், வளர்ச்சியையும் கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை எனும் சித்தாந்தத்தைக் குலைக்க தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றை ஏவி சில சக்திகள் முயல்கின்றன. ஆனால், நூற்றாண்டுகள் ஆகியும் நம்மை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை.
வேற்றுமையில் ஒற்றுமை என்பது நம்முடைய பெருமை, அடையாளம். உலகம் நம்முடைய பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் பார்த்து வியக்கிறது. பல்வேறு மதத்தினர், பல்வேறு நம்பிக்கையுள்ளவர்கள், பாரம்பரியங்கள், கலாச்சாரங்களை மதிக்கும்போது அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும்.
நூற்றாண்டுகளுக்கு முன் சந்திரகுப்த மவுரியரின் ஆலோசகர் சாணக்கியரால் இந்தியா ஒருங்கிணைந்தது. தற்போது சர்தார் படேல் மூலம் ஒருங்கிணைந்துள்ளது”.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்