எம்.எஸ். சுப்புலட்சுமி : உலகமே தலை வணங்கிய உன்னத இசைத் தவம்

 

மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்ற எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூற்றாண்டு விழா அகிலமெங்கும் அவரது ரசிகப் பெருமக்களால் பெருமையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. எம்.எஸ். அம்மா  செப்டம்பர் 16, 1916 அன்று சங்கம் வளர்த்து தகைசான்ற மாநகர் மதுரையிலே பிறந்தார்.

இவரது பெற்றோர் சுப்ரமணிய அயர், சண்முக வடிவு அம்மாள். சுப்ரமணிய அயர் வழக்கறிஞர், சண்முகவடிவு அம்மாள் சிறந்த வீணை இசைக்கலைஞர். தாயாரிடம் இருந்த இசை ஞானம் எம்.எஸ்ஸுக்கும் அவரது சகோதரர் சக்திவேல், சகோதரி வடிவாம்பாள் ஆகியோருக்கும் கிடைத்தது. எம்.எஸ். வாப்பாட்டில் கவனம் செலுத்தினார், சக்திவேல் மிருதங்கக் கலைஞர் ஆனார், வடிவாம்பாள் தாயார் வழியில்  வீணைக் கலைஞர் ஆனார்.

எம். எஸ். அம்மாவுக்கு அவரது தாயாரே முதலில் குருவானார். இன்னிசை வீணையுடன் சேர்ந்து பாடி வந்த இவர் இசையில் வெகுவிரைவில் புகழ் பெற்றார். சுப்புலட்சுமிக்கு எட்டு வயதாக இருக்கும் போது சென்னை ஆளுநர், சண்முகவடிவின் வீணை இசையை ஒலிப்பதிவு செயச் சென்றார். அப்போது மகளையும் பாடச் சோன்னார். சிறுமி சிறிதும் தயங்காமல் ‘மரகத வடிவம்’ என்ற செஞ்சுருட்டி ராகப் பாடலை உச்சஸ்தாயியில் பாடினார். இதைக் கேட்ட ஆளுநர் ஆச்சரியமடைந்து அப்பாடலையும் பதிவு செது கொண்டார்.

அன்று ஆரம்பமானது எம்.எஸ். அம்மாவின் இசைப்பயணம். பாரதத்தின் இசையியல் வரலாற்றில் தனக்கென தனி சிம்மாசனத்தை ஏற்படுத்திக்கொண்டு கோலோச்சி வந்த  எம். எஸ். அம்மாவின் சமூகப்பணி, அவரது இசைப்பணிக்கு நிகரான மதிப்புள்ளது. 1940ம் வருடம்  சதாசிவத்தை  திருமணம் செது கொண்டார். சதாசிவம் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். அவர் தனது மனைவி எம்.எஸ். உடன் காந்திஜியை சந்தித்தார். 1944ல் கஸ்தூர்பா நினைவு அறக்கட்டளைக்காக எம்.எஸ். ஐந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி அந்தக் காலத்திலேயே இரண்டு கோடி ரூபா வரை நிதி திரட்டிக்கொடுத்தார்.

தன் மனைவியின் குரலை பொதுநலத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற  சதாசிவத்தின் எண்ணமே இதற்குப் பின்புலமாக அமைந்தது. எம்.எஸ். அம்மாவின் இசை நிகழ்ச்சிகளால் கிடைத்த அனைத்துமே வறுமை, பஞ்சம், பிணி, இயற்கையின் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட நிலையில் புனர்வாழ்வுக்கான ஏற்பாடுகள், மருத்துவம், அறிவியல், ஆராச்சி, கல்வி, சமயத்தொண்டு ஆகியவற்றுக்காக செலவிடப்பட்டது. அன்று ஆரம்பமான எம். எஸ். அம்மாவின் சமூகப்பணி அவர் ஏற்படுத்திக் கொடுத்த அறக்கட்டளைகளால் இன்றும் தொடர்கிறது. புது தில்லி, மும்பை,  சென்னை  உள்ளிட்ட பெருநகரங்களில் எம். எஸ். அம்மாவின்  கச்சேரிகளில் பெறப்பட்ட நிதிகள் சங்கர நேத்ராலயாவின் வளர்ச்சிக்கு வழங்கப்பட்டன என்பது சங்கர நேத்ராலயாவுக்கு கிடைத்த மாபெரும் கௌரவம். எம்.எஸ்ஸின் திறமைகளை செம்மையாக செதுக்கி அவரை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றார் சதாசிவம். சதாசிவம் 1997ல் மரணமடைந்தார். அன்று முதல் எம்.எஸ். கச்சேரிகள் செவதை விட்டு விட்டார். வீட்டிலேயே தவ வாழ்வு வாழத்தொடங்கினார். கணவரின் நினைவுகளோடு வாழ்ந்து வந்தார்.

1966ல் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் ஒருமைப்பாட்டினை வலியுறுத்தும் விதமாக அமைந்த காஞ்சி மகாஸ்வாமிகள் எழுதிய மைத்ரீம் பஜத” – என்ற பாடலை தனது கணீரென்ற குரலில் பாடி ஐக்கிய நாடுகள் சபையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் செதது, எம்.எஸ். அம்மாவின் ஆன்மீகம், மனித நேயம், தேசியம்” – என்ற முப்பெரும் சிந்தனைக்கு, சேவைக்கு கிடைத்த அங்கீகாரம்.

இவற்றுக்கெல்லாம் உச்சமாக 1998ல் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதைப் பெற்றார் எம்.எஸ். இத்தனை பெருமைகளை உடையவராக இருந்தும் எம்.எஸ். சுப்புலட்சுமி மிகுந்த அடக்கமுடையவராக இருந்தார். இசை என்பது ஒரு கடல். நான் ஒரு மாணவி” என்று கூறினார். எம்.எஸ்ஸின் பாட்டுத் திறமையை காலங்கள் கடந்தும் நினைவூட்டும் வகையில் மீரா பஜன்கள், வெங்கடேச சுப்ரபாதம், குறையொன்றும் இல்லை, காற்றினிலே வரும் கீதம் ஆகிய பாடல்கள் வெளிப்படுத்தும். மகாத்மா காந்தியின் விருப்பப் பாடலான வைஷ்வணவ ஜனதோ பாடலையும் எம்.எஸ். குரல் சிகரத்தில் ஏற்றியதில் அந்த பாடல்  இன்றும் பிரபலமான பாடலாக விளங்கி வருகிறது. இசைக் குயில் எம்.எஸ். 88வது வயதில் மறைந்தாலும் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அவரது இசைக் குரல் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கும்.

ஒரு கோயில் விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு எம்.எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரி ஏற்பாடு செயப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவல் சுற்றுவட்டாரக் கிராமங்களில் பறை அறிவித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. அக்கிராமங்களில் இருந்து மக்கள் கூட்டம் வந்துகொண்டே இருந்தது. கச்சேரியும்  களைகட்டிவிட்டது. இக்கச்சேரியைக் கேட்க அரியலூரில் இருந்து ஒரு தம்பதியினர் 30 மைல் தூரம் நடந்தே வந்துள்ளனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் கச்சேரி முடிந்துவிட்டது. அவர்கள் நடந்து வந்ததால் தூசியும் தும்பும் அப்பிய ஆடையுடன் பதறி அடித்துக்கொண்டு கச்சேரி நடக்கும் இடத்துக்குள் நுழைந்தனர். கச்சேரி முடிந்துவிட்டது என்பதைத் தாங்க முடியாத ஏமாற்றத்துடன் எம்.எஸ். சுப்புலட்சுமியிடம் முறையிட்டனர். அவர்களுக்காக இரவு 12 மணியைக் கடந்த பின்னும் ஒரு பாடலைப் பாடித் திருப்தி அளித்தார் எம்.எஸ். ரசிகர்களின் உணர்வுகளை இசையைப் போலவே மதிப்பவர் எம்.எஸ். அம்மா.

****************************************************************************************************

நாத்திகன் நெளிய, முற்போக்கு முணுமுணுக்க…!

* சென்னையில் நாத்திகத் திமுக அரசு உலகத் தமிழ் மாநாடு நடத்தியபோது, அழைப்பின் பேரில் அங்கு பாடல்கள் பாடிய எம்.எஸ், நாராயணா என்னா நாவென்ன நாவே?” என்ற வரி வரும் சிலப்பதிகார ஆயச்சியர் குரவைப் பாடலைப் பாடி நாத்திகப் புள்ளிகளை நெளிய வைக்கத் தவறவில்லை.

* கச்சேரிகள் மூலம் புகழேணியின் உச்சியை அடைந்த எம்.எஸ், சங்கீத ஞானம் பக்தியில்லாவிட்டால் நல்ல வழியில் செலுத்துமா என்ற அருளாளர்களின் அறைகூவலை ஏற்று, கைகளில் தாளம் ஏந்தி கடவுள் திருநாமங்களை பஜனையாக வழங்கத் தொடங்கி ‘முற்போக்கு’ விமர்சகர்களின் முகத்தில் கரி பூசவும் தயங்கவில்லை!