இதுவும் ஒரு ராமர் பாலம் தான்

பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவில் நவம்பர் மாதம் 13ம் தேதி ஆசியான் (Association of South East Asian Nations) அமைப்பின் இரண்டு நாள் உச்சி மாநாடு துவங்கியது.

அதன் துவக்க விழாவில் ‘ராம ஹரி’ என்ற இசை நாடகம் நடந்தது. இந்த நிகழ்ச்சியை  பாரத பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, சீன பிரதமர் லி கேகுவாங், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்டரிகோ ரோவா  அமைப்பின் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் கண்டு களித்தார்கள்.

நாடகத்தை பார்த்துவிட்டு நமது பிரதமர் தன்னுடைய ட்விடர் பக்கத்தில் இன்றைய இசை நாடகத்தில் (ராம ஹரி) ராமாயணத்தின் பல பகுதிகள் நேர்த்தியாக நடித்துக் காட்டப்பட்டன. பாரதத்திற்கும் பிளிப்பைன்ஸுக்கும் இடையில் உள்ள நீண்ட நெடிய சரித்திரகால தொடர்புகளையும் ஆழமான கலாச்சார உறவுகளையும் இந்நாடகம் பிரதிபலிப்பதாக உள்ளது” என்று பதிவிட்டார்.

இந்த நாடகத்தை வடிவமைத்தவர் ஆலிஸ் ரேயஸ் என்ற பெண்மணி. 1969 முதல் பாலே நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

ஆமாம், இராமாயணம் எவ்வாறு பிலிப்பைன்ஸ் தீவுகளைச் சென்று அடைந்திருக்கும்?

இந்திய சரித்திர – கலாச்சார – இலக்கியங்களையும் ஆய்வு செய்த ஜுவான் ஆர். பிரான்சிஸ்கோ, ஜோஸபைன் அகோஸ்டா பாஸ்ரிசா போன்றோர் 9, 10 நூற்றாண்டுகளில் ஹிந்து மன்னர்களாலும் வணிக சமூகத்தினராலும் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கிறார்கள். இந்த சமயத்தில் ராஜேந்திர சோழன் கீழை நாடுகளில் கடாரம் (இன்றைய மலேசிய) சாவகத் தீவுகள் (இன்றைய இந்தோனேசியா) கடல் போர் புரிந்து ஸ்ரீ விஜய பேரரசை (இதுவும் ஹிந்து மன்னர் வம்சமே) அகற்றி தன்னுடைய குடையின் கீழ் கொண்டு வந்த பராக்கிரம வரலாற்றை நினைவுகூரலாம்.

ஸ்ரீ விஜயம் என்ற பெயரை நினைவு படுத்தும் விதத்தில் பிலிப்பைன்ஸின் பிரதானமான மூன்று பிரதேசங்களில் ஒன்று ‘விசயாஸ்’ என்று அழைக்கப்படுகிறது.

ராமாயண நாடகம், லானாவோ ஏரி பிரதேசத்தில் வசிக்கும் மரானாவோ பழங்குடியினரின் பாரம்பரிய நடனமான சிங்கிலில் இன்றளவிலும் இடம் பெறுகிறது.

இன்றைக்கு எண்பது சதவீதம் கிருத்துவர்கள் வாழும் தேசத்தில் ஹிந்துக்கள் இரண்டு சதவீதத்திற்கு குறைவாக இருந்தாலும், ராமாயணம் மனங்களை இணைப்பதுதான் ஆச்சரியமளிக்கிறது. அதனால் இதுவும் ராமரின் கலாச்சார பாலம் சேது தானே!! டூ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *