ராம்கோபால் வர்மா (முன்னணி திரைப்பட இயக்குநர்):
சகிப்பின்மை குறித்து சில பிரபலங்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்கள். சகிப்பின்மை அதிகரித்துவிட்டதாக அவர்களால் குறிப்பிடப்படும் இந்த நாட்டில்தான் அவர்கள் பிரபலமாக வளர்ந்தார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
அனுபம் கெர் (மூத்த நடிகர்):
ஆமிர்கான், இந்த நாடுதான் உங்களை இந்த உச்சத்தில் அமர்த்தி அழகு பார்த்திருக்கிறது. இதைவிட்டு நீங்கள் எந்த நாட்டுக்குச் செல்ல முடியும்? பல மோசமான தருணங்களிலும் கூட இந்த நாட்டில் தான் நீங்கள் வாழ்ந்து வந்தீர்கள். அப்போதெல்லாம் ஏன் வேறு நாட்டுக்குச் செல்ல வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லை? உன்னதமான இந்தியா உங்களுக்கு எப்போது சகிப்பற்ற இந்தியாவாக மாறியது?
ரவீணா டாண்டன் (பிரபல நடிகை):
யாரெல்லாம் மோடி பிரதமராகக் கூடாது என்று விரும்பினார்களோ, அவர்கள் தான் இந்த அரசு வீழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். அரசியலுக்காக நாட்டைக் களங்கப்படுத்துகிறார்கள். மும்பையின் இதயப்பகுதியில் குண்டுகள் வெடித்தபோதோ, 26/11 நிகழ்வில் நமது பாதுகாப்பு நடைமுறைகள் தகர்க்கப்பட்டபோதோ, இவர்கள் ஏன் பாதுகாப்பின்மையை உணரவில்லை?… மோடி பிரதமரானதிலிருந்து தாங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று தைரியமாகச் சொல்ல முடியாதவர்கள் தான் நாட்டின் பெயரை சீர்குலைக்கிறார்கள். உண்மையிலேயே உங்களுக்கு துணிவு இருக்குமானால், யாரை எதிர்க்கிறீர்களோ அதை தெளிவாகச் சொல்லுங்கள். அதற்காக ஒட்டுமொத்த நாட்டின் மீதும் பழி சுமத்தாதீர்கள்.
ரிஷி கபூர் (மூத்த நடிகர்):
ஆமிர்கானுக்கும் அவரது மனவிக்கும் எனது வேண்டுகோள். சில விஷயங்கள் உங்களுக்கு மாறானதாகத் தோன்றினால், அதை மாற்ற முயலுங்கள். அமைப்பில் திருத்தம் செய்யப் பாடுபடுங்கள். அதை விடுத்து தப்பியோடக் கூடாது. ஒரு கதாநாயகனுக்கு இது அழகல்ல!