கடந்த 2 வருடங்களாக பெரும் நிதி சிக்கலை சந்தித்து வருகிறது லெபனான். அந்நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பு 14 பில்லியனாகக் குறைந்து விட்டது. இதனால் எரிபொருள் இறக்குமதிக்கான அனைத்து மானியங்களும் நிறுத்தப்படும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது. இது அந்நாட்டில் ஏற்கனவே நிலவி வந்த எரிபொருள் நெருக்கடியை மேலும் மோசமாக்கியது. இதனால், தற்போது அங்கு பெரும்பாலான எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மருத்துவமனை, நீர் ஏற்றம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்குகூட எரிபொருள், மின்சாரம் கிடைக்கவில்லை. வீடுகளுக்கு ஒரு நாளுக்கு 4 மணி நேரம் மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது. இதனால் எரிபொருள் கடத்தல், பதுக்கல், துப்பாக்கிசூடு, அரசு அலுவலகங்கள் சூறையாடல் என 1975 முதல் 1990வரை நடந்த உள்நாட்டுப் போரின்போதான நிலையைவிட மோசமான சூழலை லெபனான் சந்தித்து வருகிறது. அந்நாட்டின் நாணய மதிப்பு 90 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.